Published : 24 Sep 2021 07:49 PM
Last Updated : 24 Sep 2021 07:49 PM

சம்பா பருவப் பயிர்களை உடனடியாகக் காப்பீடு செய்க: தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை

2021- 2022ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா பருவப் பயிர்களை உடனடியாகக் காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்குத் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழ்நாட்டில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டம் 2021- 2022ஆம் ஆண்டு சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மானாவாரி மாவட்டங்களுக்கு 30 சதவிகிதம் வரை, பாசன வசதி உள்ள மாவட்டங்களுக்கு 25 சதவிகிதம் வரை மத்திய அரசு, 60 முதல் 65 சதவிகிதம் வரை மாநில அரசு பங்குடனும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனினும், விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, நடப்பாண்டில் சம்பா பருவத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அரசாணை, வேளாண்மை - உழவர் நலத்துறையால் 26.08.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

சம்பா பருவத்தில் சம்பா நெற்பயிர், பருத்தி, மக்காச்சோளம் மற்றும் வெங்காயம் ஆகிய பயிர்களைக் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டு, கடன்பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண்மைக் கடன் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கடன்பெறா விவசாயிகள் “பொது சேவை மையங்கள்” மூலமாகவும் 23.09.2021 முதல் மத்திய அரசின் தேசியப் பயிர்க் காப்பீடு இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். இப்பயிர்களைக் காப்பீடு செய்வதற்கான அறிவிக்கை 26.08.2021 அன்றே வெளியிடப்பட்டு விவசாயிகள் காப்பீடு செய்ய ஏதுவாக 2 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் சம்பா பருவப் பயிர்களைக் காப்பீடு செய்வது குறித்தான நடப்புத் தகவல்களை “உழவன்” செயலி மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார வேளாண் துறை அலுவலர்களைச் சந்தித்துத் தெரிந்துகொண்டு பயிர்க் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x