Published : 24 Sep 2021 05:25 PM
Last Updated : 24 Sep 2021 05:25 PM
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''இந்தியாவில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் ஆண்டுக்கு ரூ.200 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் அரசுகளின் கொள்கை முடிவு என்று கூறி நவோதயா பள்ளிகளைத் திறக்க மாநில அரசுகள் மறுத்து வருகின்றன.
நவோதயா பள்ளிகள் தொடங்க மாநில அரசு இடம் வழங்கினால் போதும். அந்த இடத்தில் மத்திய அரசு ரூ.20 கோடியில் நவோதயா பள்ளிகளைத் தொடங்கும். தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் இல்லாததால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் செலுத்தி, கல்வி கற்கும் நிலை உள்ளது.
எனவே, தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் தொடங்கவும், அதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''நவோதயா பள்ளிகளைத் தொடங்குவது, அரசின் கொள்கை முடிவு. இதுகுறித்து அரசுதான் முடிவெடுக்க முடியும்'' என்று தெரிவித்தார்.
மனுதாரர் வழக்கறிஞர்கள் கே.நீலமேகம், தேவராஜ் மகேஷ் வாதிடுகையில், ''நவோதயா வித்யாலயா பள்ளியைத் தமிழகத்தில் தொடங்கினால், பள்ளிக் கட்டணம் செலுத்தச் சிரமங்களைச் சந்திக்கும் மக்கள் பயனடைவர்'' என்று தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT