Published : 24 Sep 2021 05:17 PM
Last Updated : 24 Sep 2021 05:17 PM
தடைகள் பல தாண்டி உள்ளாட்சித் தேர்தலில் நிற்கும் திருப்பத்தூர் இந்துமதிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மநீம கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''அரசியல் சாசனச் சட்டத்தின் அடிப்படையில் சமூக நீதியைக் காப்பதற்கானதொரு களம்தான் உள்ளாட்சி அமைப்புகள். கடைசி மனிதன் கையிலும் அரசியல் அதிகாரத்தைக் கொண்டுசேர்க்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் அநீதிகள் நடப்பது வருத்தத்திற்குரியது.
ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிட எல்லோருக்கும் உரிமையுண்டு. இதனை மறுப்பதற்கோ, தடுப்பதற்கோ யாருக்கும் உரிமை இல்லை. சட்டத்தின் நிலை இப்படியுள்ளபோதும், திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வந்த பட்டியலினத்தைச் சார்ந்த இந்துமதி, மனுத்தாக்கல் செய்வதற்கே ஏராளமான தடைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. இது மிகுந்த கண்டனத்துக்குரியது.
அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளைக் கடந்து துணிச்சலாகத் தேர்தலில் போட்டியிட முன்வந்த இந்துமதிக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த கணவர் பாண்டியனுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பல்வேறு தடைகளை எதிர்கொண்டு மனுத்தாக்கல் செய்துள்ள இந்துமதிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
வேறு யாரும் போட்டியிடாததால், நாயக்கனேரி பஞ்சாயத்துத் தலைவராக இந்துமதி தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், அவர் பஞ்சாயத்துத் தலைவராக எந்தவிதத் தடையுமின்றிச் செயல்படுவதற்கு, தமிழக அரசு உரிய ஊக்கத்தையும், மாவட்ட நிர்வாகம் உரிய பயிற்சியையும் அளிக்க ஆவன செய்யவேண்டும்.
இட ஒதுக்கீட்டுச் சுழற்சி முறையின்படி, நாயக்கனேரி பஞ்சாயத்துத் தலைவர் பதவியானது பட்டியலினப் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் மலை கிராம மக்கள் இந்துமதி போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்தும் மாநிலத் தேர்தல் ஆணையம் உரிய கவனம் அல்லது விளக்கமளிக்க வேண்டியிருப்பது அவசியமாகிறது''.
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT