Published : 24 Sep 2021 04:23 PM
Last Updated : 24 Sep 2021 04:23 PM
எடப்பாடி பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டுகளை திமுக அரசுக்கு எதிராகக் கூறுவதாக, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நகைக் கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், ஒரு குடும்பத்தில் 5 பேர் வரை முறைகேடாக நகைக் கடன் பெற்றதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "குடும்பத்தில் ஒருவர் நகைக் கடன் பெற்றால்தான் தள்ளுபடி செய்யப்படும் என திமுக சொல்லவில்லை. தில்லுமுல்லு செய்து வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்தது" என்றார்.
இந்நிலையில், ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு இன்று (செப். 24) சென்னை, தலைமைச் செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்:
"நகைக் கடன் வழங்கியதில் என்னென்ன முறைகேடுகள், குளறுபடிகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதெல்லாம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனை மறைப்பதற்காக பொருத்தமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை திமுக அரசு மீது கூறி சேற்றி வாரி இறைத்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் அடிப்படையான உண்மைகளை மறைத்துப் பேசுகிறார்.
ஆனால், திமுக தன் தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள 505 வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்படாத பல நல்ல திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றுவோம். இதனைத் தமிழக மக்கள் மிக உறுதியாக நம்புகின்றார்கள்.
திமுக அரசு பொறுப்பேற்ற சில மணித்துளிகளிலேயே தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெறும் விதமாக, மிக முக்கியமான 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்திட்டார். இதனை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 கரோனா நிதியுதவி, ஆவின் பால் ரூ.3 குறைப்பு, மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், மக்களின் மனுக்களுக்குத் தீர்வு காண்பதற்கு 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்கிற தனித்துறை ஏற்படுத்தப்பட்டது மிக முக்கியமான அறிவிப்புகளாகும்".
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT