Published : 24 Sep 2021 02:26 PM
Last Updated : 24 Sep 2021 02:26 PM
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சக உரிமையாளர்கள் கண்டிப்பாக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், பிரசுரங்கள் அச்சடிப்பது, அதற்குரிய விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தலைமையில் இன்று (செப்.24) ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட அச்சக உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில் ஆட்சியர் பேசும்போது, ''தேர்தல் தொடர்பாக எந்தவிதமான பிரசுரங்கள், சுவரொட்டிகள் அச்சடித்தாலும் அவற்றின் எண்ணிக்கை, அச்சகத்தின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும் கண்டிப்பாக அச்சடிக்க வேண்டும். இது தொடர்பான தகவல்களை மாவட்ட நிர்வாகம், தேர்தல் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். தேர்தல் நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மதம், சாதி, பிறர் மனதைப் புண்படுத்துதல் தொடர்புடைய வாசகங்களைப் பிரசுரிக்கக் கூடாது'' என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், தேர்தல் நடத்தும் அதிகாரி எஸ்.சுபாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT