Published : 24 Sep 2021 01:58 PM
Last Updated : 24 Sep 2021 01:58 PM

கரோனா மரணங்கள்: இழப்பீட்டுக்காக இறப்புச் சான்றிதழின் உண்மைத்தன்மையை உறுதிசெய்க- ஓபிஎஸ்

சென்னை

கரோனாவால்‌ பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுக்காக இறப்புச் சான்றிதழின் உண்மைத் தன்மையை உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''கரோனாவால்‌ பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின்‌ குடும்பங்கள்‌ வறுமையினால்‌ வாடிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌' என்று தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தேசிய அளவில்‌ ஒரு முடிவினை எடுக்குமாறு, பிரதமருக்குக் கடிதம்‌ எழுதினேன்‌.

இதுதொடர்பான வழக்கினை உச்ச நீதிமன்றம்‌ விசாரித்து வருகின்ற சூழ்நிலையில்‌, கரோனா தொற்றால்‌ உயிரிழந்தோரின்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ அளிக்கும்‌ நோக்கில்‌ 50,000 ரூபாய்‌ இழப்பீடு வழங்கப்படும்‌ என்றும்‌, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 30 நாட்களுக்குள்‌ தற்கொலை செய்து கொண்டோரின்‌ குடும்பத்திற்கும்‌ இந்த 50,000 ரூபாய்‌ இழப்பீடு பொருந்தும்‌ என்றும்‌ மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில்‌ தெரிவித்துள்ளது. மத்திய அரசின்‌ இந்த முடிவிற்கு அதிமுக சார்பில்‌ எனது மனமார்ந்த நன்றியினைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

கரோனா தொற்று நோயினால்‌ உயிரிழந்தவர்களின்‌ எண்ணிக்கை குறைத்துக்‌ காட்டப்படுவதாக தகவல்கள்‌ வந்தபோது, தமிழ்நாடு அரசு எவ்விதமான நிவாரணமும்‌ கரோனாவால்‌ உயிரிழந்த குடும்பங்களுக்கு வழங்காத நிலையில்‌, அதைக்‌ குறைத்துக்‌ காட்ட வேண்டிய அவசியம்‌ அரசாங்கத்திற்கு இல்லை என்றும்‌, பெற்றோரை இழந்த குழந்தைகள் இழப்பீடு பெறுவதைத்‌ தவிர வேறு எதற்கும்‌ இறப்புச்‌ சான்றிதழ்‌ பயன்படாது என்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ கூறி இருந்தார்‌.

மேலும்‌, ஒருவர்‌ மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்படும்போது கரோனா உறுதி செய்யப்பட்டு, பின்னர்‌ மாரடைப்பு காரணமாகவோ அல்லது நுரையீரல்‌ பாதிப்பு காரணமாகவோ உயிரிழந்த நிலையில்‌ அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு கரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்தால்‌, அவருடைய உயிரிழப்புக்குக்‌ காரணம்‌ கரோனா இல்லை என்றும்‌ தெரிவித்திருந்தார்‌.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த ஐசிஎம்ஆர் மருத்துவமனை அதிகாரி, "ஒருவர்‌ மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம்‌. ஆனால்‌ அந்த மாரடைப்பிற்கு நுரையீரல்‌ செயலின்மை காரணமாக இருந்து, அந்த நுரையீரல்‌ செயலின்மைக்குக் காரணம்‌ கரோனா நோய்த்‌ தொற்றாக இருந்தால்‌, அந்த உயிரிழப்புக்குக் காரணம்‌ கரோனா என்றுதான்‌ பதிவு செய்யப்பட வேண்டும்‌ என்றும்‌, இதனை சிகிச்சை அளிக்கும்‌ மருத்துவர்‌ அதற்குரிய படிவத்தில்‌ குறிப்பிட வேண்டும்‌ என்றும்‌ கருத்துத் தெரிவித்திருக்கிறார்‌. மேலும்‌, ஒருவருக்கு கரோனா தொற்றிற்கான சிகிச்சை மேற்கொண்டிருக்கும்போது, கரோனா பரிசோதனை மறுபடியும்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌ என்ற பரிந்துரை தேசிய சிகிச்சை கோவிட்‌ வழிகாட்டி நெறிமுறைகளில்‌ இல்லை என்றும்‌ அவர்‌ தெரிவித்து இருக்கிறார்‌.

கரோனாவால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்துமா, இருதய நோய்‌, நீரிழிவு நோய்‌, புற்று நோய்‌ போன்ற இணை நோய்கள்‌ இருக்கலாம்‌ என்றும்‌, இந்த நோய்கள்‌ நுரையீரலில்‌ உள்ள தொற்றினை அதிகரித்து, அதன்மூலம்‌ கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிக்கல்‌ ஏற்பட்டு, உயிரிழந்து இருக்கலாம்‌ என்றும்‌, ஆனால்‌, இணை நோய்கள்‌ அதற்குக்‌ காரணம்‌ அல்ல என்றும்‌, ஏனெனில்‌ அந்த இணை நோய்கள்‌ நேரடியாக உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை என்றும்‌, எது உயிரிழப்புக்கு காரணமாக இருக்கின்றதோ, அதுதான்‌ பதிவு செய்யப்பட வேண்டும்‌ என்றும்‌ கரோனா வழிகாட்டு நெறிமுறைகளில்‌ குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதிலிருந்து, ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளுக்கும்‌, அமைச்சரின்‌ கூற்றுக்கும்‌ முரண்பாடு உள்ளது தெரிய வருகிறது. எனவே, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளில்‌ உள்ளபடி, அனைனருக்கும்‌ இறப்புச்‌ சான்றிதழ்‌ வழங்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம்‌ பொதுமக்கள்‌ மத்தியில்‌ நிலவுகிறது.

ஐசிஎம்ஆர்‌ வழிகாட்டி நெறிமுறைகளின்படி இறப்புச்‌ சான்றிதழ்‌ வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்‌ என்றும்‌, கரோனாவால்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு நிவாரணம்‌ வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, அனைத்து குடும்பத்தினருக்கும்‌ இழப்பீடு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்‌ என்றும்‌ நான்‌ முதல்வருக்கு வேண்டுகோள்‌ விடுத்திருந்தேன்‌.

தற்போது, கரோனா நோயினால்‌ பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு நிவாரணம்‌ வழங்க வேண்டிய நிலை உருவாகி விட்டது. கரோனாவால்‌ உயிரிழந்த அனைத்துக்‌ குடும்பத்தினருக்கும்‌ இழப்பீடு சென்றடையும்‌ வகையில்‌, ஐசிஎம்ஆர்‌ வழிகாட்டி நெறிமுறைகளின்படி இறப்புச்‌ சான்றிதழ்‌ வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முதல்வரைக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்''‌.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x