Published : 24 Sep 2021 11:09 AM
Last Updated : 24 Sep 2021 11:09 AM
அழாத பிள்ளைக்கும் பாலூட்டும் தாயாக திமுக அரசு செயல்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் இன்று (செப். 24) ’மக்களைத் தேடி மருத்துவம்' மையத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"தலைவர் கருணாநிதி முதல் முறையாக முதல்வரானபோது நான் இளைஞனாக இருந்தேன். இப்போது இளைஞனாக இல்லையா எனக் கேட்காதீர்கள். இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். கருணாநிதி தன் பிறந்த நாளைத் தன் பெருமைகளை எடுத்துச் சொல்லும் நாளாகக் கொண்டாடாமல், மக்களுக்குப் பயன்படும் பல திட்டங்களை எடுத்துச் செல்லும் நாளாகக் கொண்டாடுவார். 1971-ம் ஆண்டு தன் பிறந்த நாளில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லங்களைத் தொடங்கி வைத்தார். 1972-ம் ஆண்டு தன் பிறந்த நாளில் கண்ணொளி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 1973-ல் கை ரிக்ஷாவை ஒழித்து, சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கினார். 1974-ம் ஆண்டு தொழுநோயாளிகள் மறுவாழ்வு திட்டத்தை நிறைவேற்றினார்.
அதேபோல், ஆண்டுதோறும் என் பிறந்த நாளின்போது ஒவ்வொரு ஆண்டும் அண்ணா மேம்பாலம் அருகில் இருக்கும் காது கேளாதோர் பள்ளிக்கு என் குடும்பத்தினருடன் சென்று அவர்களுடன் உரையாடி, உணவருந்திக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். அத்தகைய பிள்ளைகளைச் சந்திப்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது. அத்தகைய மனநிறைவைத்தான் இந்த விழாவின் மூலமாகவும் அடைந்துள்ளேன்.
வானுயர வள்ளுவருக்கு சிலையும் வைப்போம். லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வழங்கும் டைடல் பார்க்கையும் அமைப்போம். அதே நேரத்தில் ஏழைகளின் பசிக்கும் உணவளிப்போம். மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையானதை வழங்குவோம். இதுதான் திமுகவின் லட்சியம். வானளாவிய வளர்ச்சி, பல்லாயிரம் கோடி திட்டங்கள், பறக்கும் சாலைகள் இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், குடிசைகளை அகற்றி அவர்களுக்கு அடுக்குமாடி கட்டித்தரும் திட்டங்களையும் செயல்படுத்துகிறோம். காது கேளாதோருக்கு கருவி மாட்டுவோம். இதுதான் திமுக அரசு.
பெரிய விஷயங்களைப் பார்க்கும்போது சிறிய விஷயங்கள் கண்ணுக்குத் தெரியாது என்று சொல்வார்கள். அது தவறானது. திராவிட மாடல் வளர்ச்சியில் பெரியவை மட்டுமல்ல, சிறியவையும் தெரியும். அனைவரது கோரிக்கைகளுக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக இது இருக்கிறது என்பதற்கு இந்நிகழ்ச்சியே உதாரணம்.
2009-ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை கருணாநிதி உருவாக்கினார். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காது கேளாத 4,101 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதற்காக, இதுவரை ரூ.327 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கான அறுவை சிகிச்சைக்கு ரூ. 6 லட்சத்து 36 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்ய இயலாத குழந்தைகளுக்கு மேல் சிகிச்சை செய்யப்படுகிறது. அதற்கு 4 கோடி ரூபாய் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழுதடைந்த கருவிகளை மாற்றித் தருவதற்காக ரூ.3.62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 1,35,572 பேருக்கு ரூ.108 கோடி செலவில் புதிய காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் மேலும் தொடர்வதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நவீன கருவிகள் வாங்குவதற்காக, ரூ.10 கோடி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னை, கிருஷ்ணகிரி, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ. 98.9 லட்சம் மதிப்பிலான கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய காது கேட்கும் கருவிகளை வழங்கியிருக்கிறேன். பழுதடைந்த கருவிகள் மாற்றித் தரப்பட்டுள்ளன. புதிதாக அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் கருவிகள் தரப்பட்டுள்ளன. இந்த அறுவை சிகிச்சை செய்து முறையான பயிற்சி மூலம் பேசும் திறனை பெற்ற குழந்தைகளையும் நான் கண்டிருக்கிறேன். விரைவில் நீங்கள் முழுமையாக குணமடைய வேண்டும்.
சில மாதங்களுக்கு முன்பு 'மக்களைத் தேடி மருத்துவம்' எனும் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். இன்றைக்கு அந்தத் திட்டம்தான் தமிழக அரசுக்கு மிகப்பெரிய பெயரை ஈட்டித் தந்திருக்கிறது. நாள்தோறும் கிராமம் கிராமமாக, பகுதி பகுதியாக தெருத்தெருவாக மக்கள் நல்வாழ்வுத் துறையினர் சென்று, மக்களுக்குத் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வர இயலாதவர்கள், தீவிர நோயாளிகள், பணமில்லாதவர்களுக்கு அவர்களின் கவலையைப் போக்கும் திட்டமாக அமைந்துள்ளது.
அரசைத் தேடி மக்கள் சென்றனர். இப்போது மக்களைத் தேடிச் செல்லும் அரசாக இந்த அரசு இருக்கிறது. இந்த மாற்றத்துக்கு நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்குப் பாராட்டுகள். எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்களே பாராட்டும் அமைச்சராக மா.சுப்பிரமணியன் விளங்குகிறார். 'மாசு' இல்லாத மா.சு. என, பாஜக உறுப்பினரே ஒருவர் புகழ்ந்து பேசினார். இதற்காகப் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும். ஆனால், அழாத பிள்ளைக்கும் பாலூட்டுபவர்தான் சிறந்த தாய். அத்தகைய தாயாக திமுக என்றைக்கும் இருக்கும். ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களையும் அன்போடு அரவணைக்கும் அரசாக திமுக விளங்கும் என கருணாநிதி சொன்னார். அதைத்தான் நானும் சொல்கிறேன்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT