Last Updated : 23 Sep, 2021 06:26 PM

 

Published : 23 Sep 2021 06:26 PM
Last Updated : 23 Sep 2021 06:26 PM

கடைகள் ஏலம்: மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியில் ஒரு விண்ணப்பம்கூட இல்லாததால் மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கீழவாசல் சரபோஜி சந்தையில் கட்டப்பட்ட கடைகள் இன்று (23-ம் தேதி) ஏலம் விடப்பட்ட நிலையில், மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியில் ஒரு விண்ணப்பம்கூட இல்லாததால் மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தஞ்சாவூர் கீழவாசலில் சரபோஜி சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை மளிகை வியாபாரம், நாட்டு மருந்துக் கடைகள், காய்கறிகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடைகள் இருந்தன. இங்கிருந்த 350 கடைகளையும் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தது. இதில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்ததால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டப்பட்டன.

அதன்படி நான்கு பிரிவுகளாகப் பிரித்து 308 கடைகள் கட்டப்பட்டன. இதில் 6 கடைகளை அலுவலகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தவும், மீதமுள்ள 302 கடைகளைப் பொது ஏலத்தில் விடவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் கடைகளை ஏலம் எடுக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, ஏலம் கேட்க விரும்பும் தொகையைக் குறிப்பிட்டு மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக விநியோகம் செய்யப்பட்டன. இதையடுத்து இன்று காலை 11.30 மணிக்குப் பிறகு பொது ஏலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதையடுத்து இன்று காலை முதல் ஏலம் கேட்க விரும்புவோர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். தொடர்ந்து காலை 11.30 மணிக்கு, மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியைத் திறந்தபோது, அதில் ஒரு விண்ணப்பம் கூட இல்லை. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் 302 கடைகளை ஏலம் கேட்க 70 பேருக்கும் குறைவான வியாபாரிகளே வந்தனர்.

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், வியாபாரிகளிடம் 100 சதுர அடி பரப்பளவு கொண்ட கடை ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வைப்புத் தொகையும், அதற்குக் குறைவான பரப்பளவு கொண்ட கடைக்கு ரூ.2 லட்சமும் வைப்புத் தொகையும் செலுத்த வேண்டும் என்றார். இதையடுத்து பொது ஏலம் விடப்பட்டபோது ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை மாத வாடகையாக ஏலம் போனது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ''சரபோஜி சந்தையில் முன்பு இருந்த கடைகளின் அளவு பெரிதாக இருந்தது. தற்போது கடைகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், வைப்புத் தொகையும், மாத வாடகையும் அதிமாக இருப்பதால் வியாபாரிகள் ஏலம் கேட்க ஆர்வம் காட்டவில்லை. ஏற்கெனவே இந்தச் சந்தையில் வியாபாரம் செய்து வந்த பெருவணிகர்கள் பலரும், சந்தைக்கு அருகருகே உள்ள தெருக்களில் பெரிய அளவில் கடையைத் திறந்துள்ளனர். சிறு வியாபாரிகள் மட்டுமே தற்போது வந்துள்ளனர்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x