Published : 23 Sep 2021 06:19 PM
Last Updated : 23 Sep 2021 06:19 PM

நகைக் கடன் தள்ளுபடி மோசடியில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் கிரிமினல் வழக்குப் பதிவு: அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை

திண்டுக்கல்

தமிழகத்தில் நகைக் கடன் தள்ளுபடியில் மோசடியில் தொடர்புடைய யாராக இருந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

''தமிழகம் முழுவதுமுள்ள கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. குரும்பூர் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 247 நகைப் பொட்டலங்கள் இல்லை. வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு வழங்கக்கூடிய அந்தியோஜனா திட்டத்தின் கீழ் அவர்களது பெயரில் கிலோ கணக்கில் நகைகள் அடமானம் வைத்ததாகக் கூறி, பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களிடம் எப்படி கிலோ கணக்கில் தங்கம் இருக்கும். இதனால் பெரிய தவறுகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்தத் தவறுகள் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை மாவட்டத்திலுள்ள பாப்பையாபுரம் என்ற கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மூக்கையா என்பவர் 300 பவுன் நகைக் கடன் பெற்றுள்ளார். இதுபோல் ஒருசில நபர்கள் 100, 200, 300, 600 பவுன் என மொத்தமாக நகைக் கடன் பெற்றுள்ளனர். இதை அதிகாரிகள் விசாரணை செய்ததில், கடன் பெற்றவர்களுக்கும், கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் வங்கிகளில் உள்ள அலுவலர்களுக்கும் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பயிர்க் கடன் தள்ளுபடியிலும் மோசடி:

தமிழகத்தில் பயிர்க் கடன் தள்ளுபடியான மொத்தம் ரூ.12,110 கோடியில் சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏறத்தாழ ரூ.2,500 கோடி அளவிற்கு பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தக் கடன் தள்ளுபடி ரூ.12,110 கோடி. இதில் 25 சதவீத அளவிற்கு அங்கே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் சோதித்துப் பார்த்தபோது, விவசாயம் செய்யாத தரிசு நிலங்களுக்கு ரூ.110 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. குவாரி நிலங்களுக்கும் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 4,451 கூட்டுறவுக் கடன் சங்கங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கடன் தள்ளுபடி பெற வருபவர்களின் தகுதியை உறுதி செய்த பின்புதான் அவர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

தனியார் நகை அடகு கடை நடத்தக்கூடியவர்கள் தங்களிடம் அடமானத்திற்கு வரக்கூடிய நகைகளைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அடமானம் வைத்துப் பணம் பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்''.

இவ்வாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x