Last Updated : 23 Sep, 2021 04:33 PM

6  

Published : 23 Sep 2021 04:33 PM
Last Updated : 23 Sep 2021 04:33 PM

நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகளைப் போட்டிருப்பேன்; மக்கள் நலனே முக்கியமென்பதால் செய்யவில்லை: ஈபிஎஸ்

திருப்பத்தூர்

நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகளைப் போட்டிருப்பேன். தமிழக மக்கள் நலனே முக்கியம் என்பதால் நாங்கள் அதைச் செய்யவில்லை என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நகரச் செயலாளர் டி.டி.குமார் வரவேற்றார். வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.வீரமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில் முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது:

’’கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே பாணியை உள்ளாட்சித் தேர்தலில் கையாண்டு வெற்றி பெற பல தில்லுமுல்லுகளைத் திமுகவினர் செய்வார்கள். இதை அதிமுக முறியடித்து உள்ளாட்சித் தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

திமுகவைப் போல, அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்குக் கட்சித் தொண்டர்கள்தான் வாரிசு. அதிமுக ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் இதை எடுத்துக் கூறி வாக்குச் சேகரிக்க வேண்டும். தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்த வேலூர் மாவட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் 3 ஆகப் பிரிக்கப்பட்டது. இதற்கு முழுக் காரணமாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி.

திமுக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து என வாக்குறுதியளித்தனர். அதேபோல, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 525 தேர்தல் வாக்குறுதிகளைத் திமுக அறிவித்தது. குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் எனக் கூறினர். இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதேபோல, நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறி பொய்ப் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அதற்கான எந்த முயற்சியையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பில் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர். இதனால், நகைக் கடன் பெற்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூரில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, தேர்தல் முடிந்தபிறகு ஒரு பேச்சு என இருப்பவர்கள் திமுகவினர். அதிமுக சொன்னதையும் செய்தது. சொல்லாததையும் செய்தது. மக்களுக்காகப் போராடுகின்ற ஒரே இயக்கம் அதிமுகதான். அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களுக்கு, திமுக தற்போது அடிக்கல் நாட்டி வருகிறது.

திமுக ஆட்சியமைத்து கடந்த 4 மாதங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பி, பொய் வழக்குகளைப் போட்டு வருகிறது. மக்கள் நலனை அவர்கள் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. தமிழகத்தில் முதல்வராக நான் 4 ஆண்டுகள் 2 மாதங்கள் இருந்தேன். நான் நினைத்திருந்தால் திமுவினர் மீது பல வழக்குகளைப் போட்டிருப்பேன். ஆனால், அப்படிச் செய்யவில்லை. மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பணியாற்றினோம். மக்கள் நலன்தான் முக்கியம் என எண்ணிப் பணியாற்றினோம்.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி திமுகவினர் வழக்கம்போல் பல பொய்யான வாக்குறுதிகளை அளிப்பார்கள். ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள். இதை மக்கள் உணர வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளிக்க வேண்டும்’’.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x