Published : 23 Mar 2016 09:15 AM
Last Updated : 23 Mar 2016 09:15 AM
நுகர்வோர் தகவல் சேவை மையத்துக்கு சமீப காலமாக வரும் புகார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன. இந்த சேவை மையம் குறித்து போதிய அளவில் விளம்பரம் செய்யாததே இதற்கு காரணம் என்று நுகர்வோர் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நுகர்வோர் தகவல் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பிரச்சினை குறித்து இங்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும் புகார்கள் உரிய நடவடிக்கைக்காக துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் நுகர்வோர் பிரச்சினை குறித்து இலவச ஆலோசனை வழங்கும் பணிகளும் இங்கு நடைபெற்று வருகின்றன. அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மையத்தில் தொலைபேசி மூலம் நுகர்வோர்கள் புகார் தெரிவிக்கலாம்.
ஒப்பந்த அடிப்படையில் நுகர்வோர் நலனுக்காக செயல்பட்டு வரும் ஒரு தொண்டு நிறுவனம் இம்மையத்தை நடத்தி வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த தகவல் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. தொடக்க காலத்தில் மாதத்துக்கு சுமார் 5500 அழைப்புகள் பதிவாகின. 2010-ல் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் பதிவாகின. காலப்போக்கில் அழைப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கின. கடந்த 2015-ம் ஆண்டு சுமார் 30 ஆயிரம் அழைப்புகளே வந்துள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் 3078 அழைப்புகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
இந்த சேவை மையம் குறித்த தகவல் மற்றும் விளம்பரம் பெரிய அளவில் மக்களை சென்றடையாததே குறைந்த எண்ணிக்கையில் அழைப்புகள் பதிவாகக் காரணம் என நுகர்வோர் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். அரசாங்கம் நடத்தி வரும் தகவல் சேவை மையம் குறித்த விவரம் தெரியாமல் நுகர்வோர் பலர் போலியான நுகர்வோர் அமைப்புகளை நாடிச் சென்று ஏமாறுகின்றனர். போலி அமைப்புகள், நுகர்வோரிடம் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி பணம் பறிக்கின்றனர்.
அதனால் இந்த தகவல் சேவை மையம் குறித்தும் அதன் தொலைபேசி எண் குறித்தும் மக்கள் அதிகம் கூடும் பேருந்து, ரயில் நிலையங்கள், ரேஷன் கடைகள், தொலைக்காட்சி, வானொலி மூலம் அரசு விளம்பரம் செய்ய வேண்டும். வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இந்த தகவல் சேவை மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT