Published : 26 Mar 2016 08:35 AM
Last Updated : 26 Mar 2016 08:35 AM
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தைப் பேசு பொருளாகக் கொண்டு ’ஜனநாயகத்தில் கருத்துச் சுதந்திரமும் தேச துரோகமும்’ என்னும் விவாதத்தை ‘தி இந்து’வின் அரசியல் மற்றும் பொதுக் கொள்கை மையம் சென்னையில் நேற்று முன்தினம் நடத்தியது.
கருத்துச் சுதந்திரத்தில் தேச துரோகச் சட்டம் செலுத்தும் தாக்கம் குறித்து, சென்னை உயர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, முன்னாள் டிஜிபி ஏ.எக்ஸ். அலெக்சாண்டர், வழக்கறிஞர் மற்றும் சமூ கச் செயல்பாட்டாளர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
‘இந்திய விடுதலைக்கான குரல்களை, போராட்டங்களை ஒடுக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் தேச துரோக சட்டம். பாலகங்காதர திலகர் முதல் காந்தியடிகள் வரை சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் மீது இந்தச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய விடுதலை வேட்கையை முடக்க இந்தச் சட்டம் அவர்கள் மீது பாய்ந்தது. அடிமை நிலையி லிருந்து விடுபட்டு குடியரசு உரிமை பெற்று அரசியலமைப்பை நிறுவி ஜனநாயக நாடாக நிமிர்ந்து நிற்கும் தேசத்துக்கு அந்தச் சட்டம் அவசியமா?’ என்னும் கேள்வியோடு அறிமுக உரையைத் தொடங்கினார் நிகழ்ச்சியின் நெறியாளராக பொறுப்பேற்ற ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் முன்னாள் முதன்மை ஆசிரியர் மற்றும் இயக்குநர் என்.ரவி.
அரசியல், சட்டம், சமூக உரையாடல் ஆகிய முப்பரிமாணங்களில் தேச துரோகச் சட்டத்தையும் பேச்சுரிமையையும் அணுக வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். மேலும் அவர் பேசும்போது, ‘சமூக அமைதியைச் சீர்குலைத்து வன்முறையைக் கட்டவிழ்க்கும் நிகழ்வு ஏற்படும் பட்சத்தில்தான் இந்த சட்டத்தை பிரயோகிக்கச் சொல்கிறது உச்சநீதிமன்றம். ஆனால் பல சமயங் களில் அதிகாரம் படைத்தவர் களுக்கு ஆட்சேபணை ஏற்படும் போதெல்லாம் சட்டப் பிரிவு 124(ஏ) பாய்ந்ததை நாம் கண் கூடாகப் பார்த்திருக்கிறோம். ஆக தேசதுரோகச் சட்டத்தை வரையறுத்தால் போதுமா அல்லது சட்டப் புத்தகத்தில் அச்சட்டம் இருந்தாலே அதிகார துஷ்பிரயோகத்துக்கு மட்டுமே அது பயன் படுமா என்பதை விவாதிக்க வேண்டி யிருக்கிறது. அடுத்து, தேச பாது காப்பைவிடவும் கருத்துச் சுதந்திரமும் பேச்சுரிமையும் முக்கியமா எனும் தவறான கேள்வி பொது மக்களிடையே எழுப்பப்படுகிறது. அப்படி இல்லாமல், குறிப்பிட்டச் சூழலில், குறிப்பிட்ட நபரின் குறிப் பிட்ட உரையானது தேச பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கிறதா என்னும் கேள்வியை எழுப்பினால் சரியாக இருக்கும்’ என்றார் ரவி.
சட்டத்தை நீக்கவேண்டும்
காலனி ஆதிக்கத்துக்காக நிறு வப்பட்ட சட்டத்தை இன்று பின்பற் றத் தேவை இல்லை. நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. தேச துரோகச் சட்டம் அவசியமே இல்லை என அறுதி யிட்டுக் கூறினார் சந்துரு. ‘அரசியல் உள்நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் தேச துரோகச் சட்டம். அது எப்போதுமே துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சட்டம். ஆகையால் அதை நீக்க வேண்டும். பேச்சை தேச துரோகமாகக் கருத முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. ஆனால் டாஸ்மாக் மது விற்பனையையும் தமிழக அரசையும் விமர்சித்துப் பாடியதற்காக கோவன் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது. இப்படித்தான் காலங்காலமாக இந்தச் சட்டம் அரசியல் உள்நோக்கங்களுக்காக மட்டுமே பாய்கிறது’ என்றார் சந்துரு.
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது என்பதை தெளிவாக முன்வைத்தார் அலெக்சாண் டர். ‘சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படும்போதும் வன்முறை கட்ட விழ்க்கப்படும்போதும் தேச துரோக வழக்கு அவசியமாகிறது. அதே வேளையில் இந்தச் சட்டத்தைத் தெளிவாக வரையறுக்க வேண்டியிருக்கிறது.
காவல்துறையினரைக் குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை. அவர்கள் சட்டத்தில் உள்ளதை நிறைவேற்றுகிறார்கள். ஆகவே தேசத்தை, அரசை இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் எவை எனச் சட்டத்தில் துல்லியமாக வரையறுக்க வேண்டும். அதை விடுத்து தேச துரோகச் சட்டத்தை நீக்குவது என முடிவெடுத்தால் அடுத்தடுத்துப் பல சட்டங்களை நீக்கக் கோரி புதிய பூதம் கிளம்பும்’ என்றார்.
தேச துரோகச் சட்டம் எங்கிருந்து வந்தது? ஏன் இந்தியச் சட்டப் புத்தகத்தில் அது இடம்பிடித் தது? எது தேச பக்தி? எது தேச விரோதம்? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார் ஸ்ரீராம் பஞ்சு.
‘தேச துரோக வழக்கில் சிக்கும் நபர் கைது செய்யப்படுவார், ஜாமீன் மறுக்கப்படும், குடும்பம் நிலைகுலையும், அவருடைய வாழ்க்கை சின்னாபின்னமாகும். அத்தகைய அதிபயங்கரமான சட் டம் உட்சபட்ச சூழலில் மட்டுமே பிரயோகிக்கப்பட வேண்டும். ஒரு வருடைய பேச்சு வெறுப்பை உமிழ்ந்து, விரோதத்தைத் தூண்டி, வன்முறையைக் கட்டவிழ்த்தால் மட்டுமே அதை தேச துரோகம் எனலாம்’ என்றார் ராம் பஞ்சு.
இறுதியாக, ‘கேள்வி பதில்’ நேரத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT