Published : 03 Mar 2016 11:06 AM
Last Updated : 03 Mar 2016 11:06 AM
இந்திய அளவிலான மிகச் சிறந்த குதிரைகள் பங்கு பெறும் `இந்தியன் டர்ஃப் இன்விடேஷன் கோப்பை’ குதிரை பந்தயங்கள் மார்ச் 5 மற்றும் 6 தேதிகளில் சென்னையில் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் கடந்த 200 ஆண்டு களுக்கும் மேலாக குதிரைப் பந்தயங்கள் நடைபெற்று வருகின்றன. (இடையில் அரசு தடைவிதித்ததால் 1986 ஏப்ரல் முதல் 1987 ஆகஸ்ட் வரை மட்டும் குதிரை பந்தயங்கள் தமிழகத்தில் நடைபெறவில்லை). இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், மைசூர், பெங்களூரு, சென்னை ஆகிய 6 இடங்களில் குதிரை பந்தய மையங்கள் உள்ளன. சென்னை மையத்தின் கிளை அமைப்பாக ஊட்டியிலும் ஒரு குதிரை பந்தய மையம் செயல்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜனவரியிலும் ஊட்டியில் மே மாதத்திலும் டெர்பி (Derby) கோப்பை பந்தயங்கள் நடைபெறும். இதில்லாமல் குறிப் பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை `இந்தியன் டர்ஃப் இன்விடேஷன் கோப்பை’ குதிரை பந்தயங்களும் நடைபெறும். இந்திய அளவில் உள்ள 6 மையங்களிலும் ஓடும் மிகச் சிறந்த குதிரைகள் மட்டுமே இந்தப் பந்தயங்களில் கலந்துகொள்ளும். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்தப் பந்தயங்கள் குதிரை பந்தய தளத்தில் மிகவும் கவுரவமான ஒன்றாகக் கருதப் படுகின்றன.
இந்த பந்தயங்கள் இதற்கு முன்பு கடந்த 2005-ல் சென்னையில் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட இந்தப் பந்தயங்கள் 10 ஆண்டுகள் இடை வெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் சென்னையில் நடத்தப்படுகின்றன.
மார்ச் 5-ம் தேதி சனிக்கிழமை ஸ்பிரின்டர்ஸ் கோப்பை, ஸ்டேயர்ஸ் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. டர்ஃப் இன்விடேஷன் கோப்பை பந்தயங் களில் பங்குபெறும் குதிரைகளுக்கு அடுத்த கீழ் நிலையில் உள்ள சிறந்த குதிரைகள் இந்தப் போட்டி களில் பங்குபெறும். இவ்விரு போட்டிகளுக்கும் மொத்த பரிசுத் தொகையாக ரூ 50 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 6-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை `இந்தியன் டர்ஃப் இன்விடேஷன் கோப்பை’ போட்டி கள் நடக்கின்றன. இதற்கான பரிசுத் தொகை ரூ.1.50 கோடி என அறிவிக் கப்பட்டுள்ளது. இவ்விரண்டு போட்டிகளிலும் பிற மையங்களைச் சேர்ந்த 85 குதிரைகளும் சென்னை மையத்தைச் சேர்ந்த சுமார் 130 குதிரைகளும் பங்கு பெறுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்குபெறு வதற்காக இந்தியா முழுவதுமிருந்து 45 ஜாக்கிகளும், 35 குதிரை பயிற்றுநர்களும் வரவிருக்கின்ற னர். குதிரைப் பந்தயங்களை கண்டு களிக்க சுமார் 20 ஆயிரம் பேர் வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிண்டியிலுள்ள ரேஸ் கிளப் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடு கள் மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் தலைவர் ஆர்.ராமகிருஷ்ணன், செயலாளர் எஸ்.எம்.கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினரால் செய்யப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT