Published : 22 Sep 2021 05:22 PM
Last Updated : 22 Sep 2021 05:22 PM
வேட்பாளர் தேர்வுக்காக அரசு 3 வார காலம் முடக்கப்பட்டது என, புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து, அவர் இன்று (செப். 22) தெரிவித்திருப்பதாவது:
"புதுச்சேரி மாநிலங்களவை எம்.பியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இப்பதவிக்குரியவரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.
இப்பதவிக்குரியவரை தேர்வு செய்யும் அதிகாரம் தற்போது புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜகவுக்கு உள்ளது. அக்கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 10 எம்எல்ஏக்களையும், பாஜக 6 எம்எல்ஏக்களையும் கொண்டுள்ளது. அதன்படி, நியாயமாக பார்த்தால் இந்தப்பதவி என்.ஆர். காங்கிரஸுக்குத்தான் சென்று இருக்க வேண்டும். ஆனால், தற்போது அப்பதவிக்கு பாஜக வேட்பாளரை களம் இறக்கியுள்ளது.
அப்பதவியை என்.ஆர். காங்கிரஸ் விட்டுக் கொடுத்ததா? அல்லது பாஜக பறித்துக் கொண்டதா? என்ற கேள்விகளை எழுப்ப முன்வரவில்லை. இது அக்கூட்டணியின் உள்கட்சி விவகாரம், அதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. ஆனால், இதை முன்கூட்டியே இரு கட்சிகளும் அறிவித்து இருக்கலாம்.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதிலேயே ஆட்சியாளர்கள் மக்கள் நலத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் 3 வார காலத்தை வீணடித்துள்ளனர். அமைச்சர்களும், முதல்வரும் இதுபற்றிய சிந்தனையிலேயே இருந்தனர். அப்பதவியின் மீது ஆசை கொண்டவர்களும் அவர்களையே சுற்றிச் சுற்றி வந்தனர்.
இதனால், புதுச்சேரி அரசு சுமார் மூன்று வார காலம் முடங்கிப்போய் கிடந்தது. இதை ஏற்க முடியாது. இதற்காக, என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியை கண்டிக்கிறோம். அதேசமயம், இனிமேலாவது அரசு வேகமெடுத்து செயல்பட வேண்டும்.
மேலும், என்.ஆர்.காங்கிரஸ் என்ன வாக்குறுதியை பெற்றுக் கொண்டு எம்.பி. பதவியை விட்டுக் கொடுத்தது? பாஜக என்ன வாக்குறுதியை அளித்து எம்.பி. பதவியை தட்டிப்பறித்தது? என்பதை மக்களுக்குத் தெரிவிக்க முன்வர வேண்டும். அதாவது, புதுச்சேரி கடன் தள்ளுபடி உத்தரவாதம் ஏதும் அளிக்கப்பட்டதா?
மத்திய அரசின் மானியம் 90 சதவீதமாக உயர்த்தி வழங்குவதாக ஏதும் உத்திரவாதம் அளிக்கப்பட்டதா? மாநில அந்தஸ்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டதா? மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்ப்பதாக உறுதி அளிக்கப்பட்டதா? எந்த உறுதிமொழி அளிக்கப்பட்டு பதவி பெறப்பட்டது?
எந்த உறுதிமொழியை ஏற்றுப் பதவி அளிக்கப்பட்டது? என்பதை அறிவித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தெளிவுப்படுத்த வேண்டும். அதேசமயம், புதியதாக புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ள செல்வகணபதிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் புதுச்சேரி மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக சிறந்த முறையில் செயல்பட வேண்டும்".
இவ்வாறு அவர் தெளிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT