Published : 22 Sep 2021 02:51 PM
Last Updated : 22 Sep 2021 02:51 PM
உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தம் நிறுவனத்தைத் தொடங்கிட வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (செப். 22) நடைபெற்ற 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னிலையில் தமிழ்நாடு' ஏற்றுமதி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"ஏற்றுமதியில் ஏற்றம் பெற்று இந்தியாவின் முன்னணி இடத்தை நோக்கி, தமிழகம் செல்லத் தொடங்கியிருக்கும் நேரத்தில் இந்த மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியதாக அமைந்துள்ளது.
தொழில் வளர்ச்சி என்பது உங்கள் துறை வளர்ச்சி மட்டுமல்ல, அது அனைத்துத் துறைகளின் வளர்ச்சி என்பதை உணர்ந்தவன் நான். அதுதான் இந்த மாநிலத்தின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சியாகும். தொழில்துறை வளர்கிறது என்றால், அனைத்துத் துறைகளும் வளர்கிறது என்று பொருள். எனவேதான் இதுபோன்ற மாநாடுகள், கண்காட்சிகள் தமிழகத்தில் அதிகம் நடைபெற வேண்டும்; சென்னையில் மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நடைபெற வேண்டும்.
இன்றைய தினம் 2,120.54 கோடி ரூபாய் மதிப்பிலான 24 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலமாக, 41 ஆயிரத்து 695 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இந்த முதலீடுகள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி என்று தமிழகத்தின் பரவலான வளர்ச்சிக்கு ஏதுவாக, பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தருணத்தில் முதலீடு மேற்கொண்ட அனைவருக்கும் எனது நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, ஏற்றுமதியைப் பெருமளவில் பெருக்கிடுவதற்கு, எந்த நிலையிலும், ஏற்றுமதியாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இந்த அரசு நிச்சயமாக உறுதுணையாக நிற்கும். அனைத்து ஆதரவுகளையும் தொடர்ந்து அளிக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி என்பது எப்போதும் தமிழகத்தின் வளர்ச்சியாக மட்டும் இருந்தது இல்லை. அது இந்தியா முழுமைக்கும் பரந்த வளர்ச்சியாக இருந்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய வளர்ச்சியாகவும் இருந்துள்ளது. அதைத்தான் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றார் ஔவை. உலக வர்த்தகர்களும் வணிகர்களும் ஒன்றுகூடும் இடமாக நம்முடைய தமிழ் நிலம் இருந்துள்ளது. அத்தகைய பழம்பெருமையை நாம் மீட்டாக வேண்டும்.
நம்முடைய தயாரிப்புகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் நிறுவனத்தைத் தொடங்கிட வேண்டும். அதாவது உலகம் முழுக்க நாம் செல்ல வேண்டும். உலகம், தமிழகத்தை நோக்கி வந்தாக வேண்டும். மொத்தத்தில் தமிழகத் தொழில்துறையின் உள்ளங்கையில் உலகம் இருக்க வேண்டும். அதுவே உங்களது இலக்காக அமைந்திட வேண்டும்.
இந்திய அளவில் தொழில்துறையில் சிறந்த மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது.
* 1.93 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியுடன், இந்தியாவிலேயே, தமிழகம் மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்கி வருகின்றது.
* 2020-21ஆம் ஆண்டுக்கான அகில இந்திய அளவிலான ஏற்றுமதியில், தமிழகத்தின் பங்களிப்பு 8.97 விழுக்காடு ஆகும்.
* மோட்டார் வாகன உற்பத்தியில், தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது.
* ஆடை மற்றும் அணிகலன்கள் ஏற்றுமதியில் 58 விழுக்காடு பங்களிப்பு தருகிறது.
* காலணி ஏற்றுமதியில் 45 விழுக்காடு பங்களிப்பு தருகிறது.
* மின்னணு இயந்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் 25 விழுக்காடு பங்களிப்பு அளித்து வருவது மிகவும் பெருமைக்குரியது ஆகும்.
இந்த வெற்றி, ஒவ்வொரு தமிழனின் உழைப்பை உள்ளடக்கிய வெற்றியாகும். இந்த வெற்றியோடு நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது. இந்த விழுக்காடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகி வர வேண்டும்!
* வேலூர் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்து தோல் பொருட்கள்
* கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரிலிருந்து ஜவுளி
* சென்னையிலிருந்து மோட்டார் வாகனப் பொருட்கள் என்று பரவலான வகையில் சீராக ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி, சமச்சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி. உலக வர்த்தகத் தரத்துக்கு ஏற்றவகையில் மதிப்புக் கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். அதன் மூலமாகத்தான் ஏற்றுமதி பெருகும். அதனால்தான் வேலைவாய்ப்பும் பெருகும். இது மாநிலத்துக்கும் வருமானம் ஈட்டித் தரும். இத்தகைய சுழற்சி அடிப்படையில் முன்னேற்றம் அமைய வேண்டும். தமிழகம் என்றாலே மோட்டார் வாகனங்கள், ஜவுளி - ஆடை அணிகலன்கள், தோல் பொருட்கள், காலணிகள் ஆகியவற்றின் தயாரிப்பில் எப்போதும் முன்னேற்றம் இருக்கும். அந்த வரிசையில்,
* மின் வாகனங்கள்
* மின்சக்தி கலன்கள்
* புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
* மின்னணுவியல்
* உணவு பதப்படுத்துதல்
* வான்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளும் சேர வேண்டும்.
அப்படிச் சேர்ந்தால்தான் தமிழகத்துக்கான ஏற்றுமதித் திறன் கூடுதல் ஆகும். தமிழகத்தின் தனித்தன்மையான பொருட்கள் என்று ஏராளமாக உள்ளன. அதற்கு உலகளாவிய மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.
* காஞ்சிபுரம் மற்றும் ஆரணி பட்டுச்சேலைகள்
* சின்னாளப்பட்டி சுங்குடிச் சேலைகள்
* கோயம்புத்தூர் கிரைண்டர்கள்
* தஞ்சாவூர் ஓவியங்கள் - தட்டுகள்
* சுவாமிமலை சிற்பங்கள்
* பவானி ஜமக்காளம்
* பத்தமடை பாய்கள்
* மதுரை மல்லி
* மாமல்லபுரம் கற்சிற்பங்கள்
* திண்டுக்கல் பூட்டு
* சிறுமலை வாழைப்பழம் - எனப் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை அடுக்கிக்கொண்டே போகலாம். வெளிநாடுகளில், இந்தப் பொருட்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இதன் மூலம், நமது உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியின் மூலம் மேன்மை அடைந்திட இயலும். இவற்றை அதிகமாகத் தயாரிக்க வேண்டும்.
அதே நேரம், அதன் தரம் குறையாதவாறும் தயாரிக்க வேண்டும். ஏற்றுமதித் துறை எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில், கரோனா முழு ஊரடங்கு காலத்திலும், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் பணிபுரிவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஏற்றுமதிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் நடைபெற்றது மட்டுமின்றி, தற்போது முழுமையான அளவில் செயல்படத் தொடங்கியுள்ளன. இது எங்களுக்கு மிகப்பெரிய மனநிறைவினை அளித்துள்ளது. ஏற்றுமதித் திறனை மேம்படுத்திட, தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
* இந்நடவடிக்கைகளில் மிக முக்கியமாக, 'தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை'யை வெளியிட்டதில், நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
* மாநிலத்திலிருந்து ஏற்றுமதியை மேலும் மேம்படுத்த, தலைமைச் செயலாளர் தலைமையில், மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு (State Export Promotion Committee) ஒன்று அமைக்கப்பட உள்ளது.
* அதேபோல், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழிகாட்டும் 'குறு, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கையேட்டினை' இன்று வெளியிட்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
* தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளித்திட, தூத்துக்குடியில், ஏற்றுமதியை மையமாகக் கொண்ட 'சர்வதேச அறைகலன் பூங்கா' (International Furniture Park) ஒன்று, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசால் அமைக்கப்பட்டு வருகிறது.
* குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஏற்றுமதித் திட்டங்களைக் கண்காணிக்க ஒரு பிரத்யேக அமைப்பு (Project Monitoring Unit) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* ஏற்றுமதிகள் தொடர்பான இடர்ப்பாடுகளைக் களைதல், அனுமதிகள் பெற்றுத் தருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வழிகாட்டி நிறுவனத்தில், ஏற்றுமதி அமைப்பு (Export Cell) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
* ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், மாநல்லூரில் 6,000 ஏக்கர் பரப்பளவிலும், தூத்துக்குடியில் 5,000 ஏக்கர் பரப்பளவிலும் சிப்காட் நிறுவனம் மூலம் இரண்டு பொருளாதார வேலைவாய்ப்புப் பகுதிகளை (Export Enclaves) உருவாக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
* திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோவை மற்றும் ஓசூர் ஆகிய பத்து ஏற்றுமதி மையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
* ஏற்றுமதியாளர்கள் மதிப்புக் கூட்டல் பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, தொகுப்புச் சலுகைகள் வழங்க ஒரு திட்டம் வடிவமைக்கப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்துவம் வாய்ந்த பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை உலக அளவில் சந்தைப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் 'மாவட்ட ஏற்றுமதி மையங்கள்' உருவாக்கப்பட்டு வருகின்றன.
* தமிழக அரசு, தோல் தொழில் துறைக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவமும், ஆதரவும் அளித்து வருகிறது. தமிழகத்தில், 406.06 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் 10 பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மேம்பாட்டு திட்டத்துக்காக, 15 விழுக்காடு மானியம் என்ற அளவில் 60.91 கோடி ரூபாய் மானியம் வழங்கிட, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
* பருத்தி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீது விதிக்கப்படும் 1% சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டும் என நெசவாளர்கள், தொழில்முனைவோர், நூற்பாலைகள், பஞ்சு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த 1% சந்தை நுழைவு வரியை நாங்கள் தற்போது நீக்கியுள்ளோம். இதன் விளைவாக, இந்தியப் பருத்தி கார்ப்பரேஷன், தற்போது சேலம், மதுரை, கோயம்பத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் பஞ்சுக் கிடங்குகள் அமைத்திட முன்வந்தள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
* டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் சேவைகளின் மூலமாக, உலக வர்த்தகம் முன்னெப்போதையும் விட, பன்மடங்கு பெருகி வருகின்றது. இது நம் ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு மிகப் பெரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசின் M-TIPB நிறுவனம், Flipkart நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
*காவிரி டெல்டா பகுதியில் வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்க திருச்சி - நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு இடையேயான பகுதி வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருவழித்தடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* தேனி, மணப்பாறை மற்றும் திண்டிவனம் ஆகிய 3 இடங்களில் உணவுப் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
* 'வேளாண் ஏற்றுமதி சேவை மையமும்' உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
- இவை அனைத்தையும் செயல்படுத்தும்போது தமிழகம் அடையும் வளர்ச்சி என்பது இந்தியாவிலேயே சிறந்ததாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழகம் கொண்டிருக்கும் பன்முகத் திறன்கள் மற்றும் வளங்களைக் கணக்கிட்டுப் பார்த்தால், நமது திறனுக்கேற்றவாறு, ஏற்றுமதியில் இன்னும் பல மடங்கு வளர்ச்சிபெற இயலும். பெரும்பாலான பொருட்கள் சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதிகள் செய்யப்படுகின்றன. இந்நாடுகளுக்கு மட்டுமின்றி 'உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம், 'Made in India' என்று நாம் சொல்கிறோம், அதுபோல 'Made in Tamil Nadu' என்ற குரல் ஒலிக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை மட்டுமல்ல, லட்சியமும் கூட. அந்த லட்சியத்தை நோக்கியே எங்களின் பயணம் அமைந்திடும்.
2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தைத் தமிழகம் அடைந்திட வேண்டும் என்ற இலக்கினை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். இதை அடைய வேண்டுமெனில், தற்போது 26 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் மாநிலத்தின் ஏற்றுமதியை, 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்திட வேண்டும். உலக வர்த்தக வரைபடத்தில், தமிழகம் மிகப்பெரும் வளர்ச்சி பெறுவதை ஒரு சவாலாக நாங்கள் எடுத்துக்கொண்டு அல்லும் பகலும் உழைத்து வருகின்றோம், இந்த லட்சியத்தினை அடைவதற்கு, பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள நிறுவனங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT