Published : 21 Sep 2021 06:54 PM
Last Updated : 21 Sep 2021 06:54 PM

மதுரையில் 4 வார்டுகளில் 100% கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை

மதுரை

மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 4 வார்டுகளில் 100 சதவீதம் அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி இலக்கை எட்டுவதற்கு தமிழக சுகாதாரத் துறை தடுப்பூசி முகாம்களை அதிகரித்துள்ளது. நடமாடும் வாகனங்கள், சிறப்பு முகாம்கள் மற்றும் நிரந்தரமாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் 15 லட்சத்து 3 ஆயிரத்து 739 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மாநகராட்சியில் மொத்தம் 18 வயதிற்கு மேற்பட்ட 12.5 லட்சம் பேர் தடுப்பூசி போட தகுதியுள்ளவர்கள். அவர்களில் இதுவரை 9 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில், மாநகராட்சி 10, 12, 46, 68 மற்றும் 82 வது வார்டுகளில் 100 சதவீதத் தடுப்பூசி இலக்கு எட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘100 வார்டுகளில் தடுப்பூசி 100 சதவீத இலக்கை அடைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 4 வார்டுகளில் 100 சதவீத இலக்கு முதல்முறையாக எட்டப்பட்டுள்ளது. அந்த வார்டுகளில் மருத்துவர்கள் அறிவுரைப்படி தடுப்பூசி வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் இந்த 4 வார்டுகளில் தடுப்பூசி போட்டுள்ளோம்.

மக்களிடம் தடுப்பூசி விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. அதனால், முன்பு மாவட்டத்தில் சராசரியாக 3 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டனர். தற்போது அது 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தமிழகத்திலே அரசு ராஜாஜி மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் அதிகமாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் மாநகராட்சியைப் போல் மாவட்டம் முழுவதும் 100 சதவீதத் தடுப்பூசி இலக்கு எட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x