Published : 21 Sep 2021 06:08 PM
Last Updated : 21 Sep 2021 06:08 PM
இந்தியாவில் உள்ள மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி பற்றாக்குறை இருக்கிறபோது மத்திய அரசின் தடுப்பூசி மருந்து ஏற்றுமதி என்ற திட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (செப். 21) சென்னை வானகரத்தில் அப்போலோ மருத்துவமனையில் சிமுலேஷன் மையத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சொன்னதாக ஒரு செய்தி எல்லா செய்தித்தாள்களிலும் வந்துள்ளது. 'விரைவில் இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் ஏற்றுமதியாகும்' என்ற செய்திதான் அது. உண்மையிலேயே கரோனா பேரிடருக்குத் தடுப்பூசி ஒன்றுதான் தீர்வாக இருந்துகொண்டிருக்கிறது. மருத்துவ உலகம் அதை பாராட்டி வரவேற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்னமும் நமக்கே தடுப்பூசி போதாத நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் இன்னும் தடுப்பூசி போட இயலாத நிலையில், தமிழகத்தில் நேற்றைக்கும், இன்றைக்கும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படாததற்குக் காரணம், தடுப்பூசி தட்டுப்பாடுதான்.
தமிழக முதல்வர் ஒரு நிகழ்ச்சியில் வலியுறுத்தி சொன்னதுபோல், தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஏழரை லட்சம் அளவுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு மருத்துவக் கட்டமைப்பு என்பது இருக்கிறது என்கிற ஒரு தகவலைச் சொன்னார்.
அதனடிப்படையில்தான், கடந்த 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அம்முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது இந்திய அளவில் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்பட்டுள்ளது. தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமே 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் அளவுக்கு தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நேற்றைக்கு முன்தினம் இலக்கையும் தாண்டி 16 லட்சத்து 43 ஆயிரம் அளவுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை நமக்கு 12 கோடியே 12 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும். 6 கோடியே 6 லட்சம் பேர் 18 வயதைக் கடந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தகுதியானவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளார்கள். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 9 ஆயிரத்து 804. இன்னும் ஏழரைக் கோடி அளவிலே தடுப்பூசிகள் தேவைப்படுகிறது.
மத்திய அரசின் சார்பில் இதுவரை 80 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்கூட முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 61 கோடிபேர் தான். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடியவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையைப் பொறுத்தவரை 139 கோடி என்றாலும், அதில் 18 வயதுக்கும் மேற்பட்டோர் 70 சதவிகிதத்தினர் என்பது 97 கோடியே 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டாக வேண்டும்.
அதில், இரண்டாம் தவணை என்கிற வகையில், 194 கோடியே 60 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போட வேண்டும். இதுவரை இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 77 லட்சத்து 73 ஆயிரத்து 549 பேர். ஆக, இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மட்டும்தான் தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசிப் போடப்படுவதற்கு இன்னமும் 115 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும்.
இந்த நிலையில், 12 வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதை உலகின் பல்வேறு நாடுகள் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் அதை நாம் பரிசீலிக்க வேண்டும். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி அண்மையில் மருத்துவத்துறை அலுவலர்களோடு நான், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரைச் சந்தித்தபோது, கல்லூரியில் சேர்கிற மாணவர்கள் 17 வயதிலிருந்து 18 வயதில் இருக்கிறார்கள் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் துறையின் அலுவலர்களோடு கலந்தாலோசனை செய்து தெரிவிப்பதாகக் கூறினார்.
17 வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கானத் தடுப்பூசி செலுத்துவதுப் பற்றி இன்னமும் திட்டமிடப்படாமல் இருக்கிறது. இந்த நிலையெல்லாம் இருக்கும்போது, இந்தியாவில் உற்பத்தியாகிற தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வோம் என்கிற செய்தி, எந்த வகையில் சரியாக இருக்குமென்று தெரியவில்லை.
தமிழக மக்களின் சார்பில், பிரதமருக்கும்,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் விடுக்கிற வேண்டுகோள் என்பது தடுப்பூசிகள் ஏற்றுமதி என்கிற திட்டத்தை பின்னாளில் வைத்துக்கொள்ளுங்கள். ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் முழுவதுமாக தடுப்பூசி செலுத்துவதை இலக்காக வைத்துக்கொள்ளுங்கள் என்கிற வேண்டுகோளை விடுக்கிறோம்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT