Published : 21 Sep 2021 05:50 PM
Last Updated : 21 Sep 2021 05:50 PM
நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு பெற மத்திய அரசை வலியுறுத்தி மக்கள் எழுச்சி மாநாடுகள், போராட்டங்கள் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இதுகுறித்து ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட்டிலிருந்து விலக்குக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு, மத்திய அரசு அனுமதி அளிக்கவேண்டும் என்றும், இதற்காக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மாநாடுகள் நடத்துவதெனவும், மக்கள் எழுச்சிப் போராட்டங்களை மேற்கொள்வது என்றும், திராவிடர் கழகம் இன்று (21.9.2021) சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1: இரங்கலும் - வேண்டுகோளும்!
நீட் தேர்வில் இரண்டு, மூன்று முறை முயன்றும் வெற்றி கிட்டவில்லை என்ற விரக்தியாலும், நீட் தேர்வில் வெற்றி பெற வாய்ப்பு இருக்காது என்ற அச்சத்தாலும் தற்கொலை முடிவுக்கு வந்து உயிரைப் போக்கிக் கொள்வதை மாணவக் கண்மணிகள் கைவிடவேண்டும். நீட் தேர்வு ஒழிப்புக்கான களம் காண, நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு உங்களின் மருத்துவக் கல்வி உரிமைக்காகப் போராட என்றும் ஆயத்தமாக உள்ளோம் என்பதால், இப்படிப்பட்ட அவசர முடிவுக்கு வந்து உங்கள் பெற்றோர், உற்றார் உறவினர்களுக்கும், எங்களுக்கும் வேதனையை உருவாக்க வேண்டாம் என்றும் மாணவக் கண்மணிகளை வேண்டிக் கொள்கிறோம்.
தீர்மானம் 2: நீட் தொடர்பான தமிழக அரசின் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்துகிறது
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி முந்தைய அரசு, அவசரக் கோலத்தில் சட்டப்படியான முகாந்திரமும், நியாயப்படியான நிலைப்பாடு எதனையும் நிறுவிட முன்வராமல் மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றியதைப் போல் அல்லாமல், சட்ட முறைமைகளை (Due Process) முறையாகக் கடைப்பிடிக்கும் விதமாக நீட் தேர்வு குறித்து நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஆணையம் அமைத்து, சமூக, பொருளாதார, கல்வி நிலை அடிப்படைக் காரணங்களை முறையாக ஆராய்ந்து வழங்கப்பட்ட அவ்வாணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்ட மசோதா இயற்றப்பட்டு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தகைய முறையான சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் இசைவினையும் பெற தமிழக அரசுக்கும், முதல்வர் எடுக்கும் முயற்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் முழு ஆதரவினையும் வழங்கவேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 (அ):
கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருந்தும், மாநில அரசின் முறையான எதிர்ப்பை - கோரிக்கையை முறையாகப் பரிசீலிக்காமலும், மாநில அரசின் குரலை மதிக்காமலும், யதேச்சதிகாரமாக நீட்டை நடைமுறைப்படுத்துவதில் மூர்க்கத்தனமாகவே மத்திய அரசு நடந்துவருவது கண்டனத்திற்குரியதாகும். கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
ஒரு பக்கம் சட்டப்பேரவை, நீதிமன்றங்கள் மூலமாகப் போராட்டங்களை நடத்தி வந்தாலும், மக்கள் மன்றத்தின் மூலமாக நடத்தப்படும் போராட்டம் மிகவும் முக்கியமானதும், வலிமையானதுமாகும். கடந்த காலங்களில் மக்கள் பிரச்சினையில் வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டத்தை நடத்தியதன் மூலமாக, வெகுமக்களின் எழுச்சி காரணமாக கோரிக்கைகள், உரிமைகள் வெற்றி பெற்றுள்ளன என்பதுதான் வரலாறு.
‘நீட்'டுக்கு எதிராக வெகுமக்களின் எழுச்சி கிளர்ந்துள்ள நிலையில், அதனை ஒருமுகப்படுத்தும் வகையிலும், மேலும் அதனைக் கூர்மைப்படுத்தும் வகையிலும் சமூக நீதிக்கான எழுச்சி மாநாடுகளை சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகரங்களில் நடத்துவது என்று இந்த ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நீட் தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது என்றும், நீட் ஒன்றும் தகுதிக்கு அளவுகோல் இல்லை என்றும், நீட் கேள்வித்தாள் 35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதும் - ஆள்மாறாட்டம் செய்யப்படுவதும் - இது யாருக்குப் பயன்படக் கூடியது என்பது விளங்கக் கூடியதாகும். முறைகேடுக்கு அப்பாற்பட்ட முறையே நீட் என்பது சுத்தப் புரட்டு என்பதும் இவற்றின்மூலம் அம்பலமாகி விட்டது என்பதையும் இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில், இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு உள்ளிட்ட எந்தப் படிப்புகளிலும் ‘நீட்' தேர்வு நுழைய அனுமதிக்கக் கூடாது.
அகில இந்தியத் தொகுப்புக்கு, மருத்துவ இடங்களை வழங்குவதிலிருந்து தமிழ்நாடு விலக்கு பெற வேண்டும். மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) நெக்ஸ்ட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்.
தீர்மானம் 3 (ஆ)
நீட் பாதிப்புகளை சமூக வலைதளங்களின் மூலம் பிரச்சாரம் செய்தல்!
சமூக வலைதளம் என்பது இந்தக் காலகட்டத்தில் பிரச்சார உத்தியில் மிக முக்கியமான இடத்தினை வகிப்பதால், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் முதலியவை மூலம் சமூக நீதியின் தேவையைப் புரிந்துகொள்ளும் வகையில், ஒவ்வொருவரும் நாள்தோறும் நீட் எதிர்ப்புக்கான காரணங்களையும், நீட்டினால் ஏற்படும் பாதிப்புகளையும் எளிய முறையில் சிறப்பாகப் பரப்புவதை முக்கியக் கடமையாகக் கொண்டு செயல்படுமாறும் இந்தக் கலந்துரையாடல் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
மேலும் தேவையான வகைகளில் மக்கள் போராட்டங்களையும் முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது''.
இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT