Published : 21 Sep 2021 04:04 PM
Last Updated : 21 Sep 2021 04:04 PM
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் சட்டரீதியாக வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்த பட்டியலை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (செப்.21) வெளியிட்டார்.
வேலூர் மாவட்டத் திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 13 இடங்களில் திமுக போட்டியிடுகிறது.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 138 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 3, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 1, இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா 1 என மொத்தம் 6 இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் திமுக போட்டியிடுகிறது.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பெருவாரியான இடங்களில் வெற்றிகளைப் பெற்றோம். இப்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மாவட்டத்தில் தொடர் மழையால் பாலாற்றில் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மோர்தானா அணையும் நிரம்பியுள்ளது. வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டினால் மட்டுமே முழுமையான அளவு ஏரிகளுக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். எனவே பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும்.
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் சட்ட ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.’’
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.
அப்போது, வேலூர் மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார், மாவட்ட அவைத் தலைவர் முகமது சகி, வேலூர் மாநகரச் செயலாளரும், வேலூர் எம்எல்ஏவுமான கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment