Published : 21 Sep 2021 03:51 PM
Last Updated : 21 Sep 2021 03:51 PM

மகளிர் சுய உதவிக் குழுக்கள், தொழில் குழுக்களுக்கு ரூ.699.26 கோடியில் உதவி, வங்கிக் கடன்கள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்கள், உற்பத்தியாளர், தொழில் குழுக்கள் மற்றும் ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகளுக்கு ரூ.699.26 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வங்கிக் கடன்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.9.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்கள், உற்பத்தியாளர், தொழில் குழுக்கள் மற்றும் ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகளுக்கு ரூ.699.26 கோடி மதிப்பில் 6,00,926 பயனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வங்கிக் கடன்கள் வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையால் 1989ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாகக் கருணாநிதியின் ஆட்சியில் தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட சுய உதவிக் குழுத் திட்டம் பிற மாநிலங்களால் பின்பற்றப்பட்டு, ஏழை எளிய மகளிரின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு முன்னோடியாக விளங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை 7.22 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அக்குழுக்களில் சுமார் 1 கோடியே 6 லட்சம் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் மூலம் பெண்களின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் உள்ள 8,210 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தலா ரூ.15,000/- வீதம் ரூ.12.32 கோடி மதிப்பீட்டில் சுழல் நிதி, ஊரகப் பகுதியில் உள்ள 8,776 ஏழை எளிய நலிவுற்றவர்களுக்கு தலா ரூ.25,000/- வீதம் ரூ.10.97 கோடி நலிவு நிலை குறைப்பு நிதி, சுய உதவிக் குழு ஒன்றுக்கு தலா ரூ.50,000/- வீதம் 13,255 குழுக்களுக்கு ரூ.66.28 கோடி ரூபாய் சமுதாய முதலீட்டு நிதி, ஊட்டச்சத்துத் தோட்டம் அமைக்க 1,27,903 சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.64 லட்சம் நிதியுதவி, கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கூடுதல் வருமானம் பெற நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவித்திட தலா 100 நாட்டுக் கோழிக்குஞ்சுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் 3,936 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.3.53 கோடி நிதியுதவியை முதல்வர் வழங்கினார்.

பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஏதுவாக அசோலா தீவன உற்பத்தி செய்திட 4,043 மகளிருக்கு ரூ.2.02 கோடி நிதியுதவி, 186 ஆடு வளர்ப்பு வங்கிகள் அமைத்திட ரூ.1.86 கோடி நிதியுதவி, விவசாயிகளின் பயன்பாட்டிற்குக் குறைந்த கட்டணத்தில் கருவிகளை வாடகைக்கு வழங்கும் வேளாண் கருவிகள் வங்கி அமைக்க 1,427 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.9.61 கோடி நிதியுதவி, 3,000 வேளாண் உற்பத்தியாளர் குழுக்களுக்குத் தளவாடங்கள், சிறிய இயந்திரங்கள், அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் மூலதன நிதி ஆகியவற்றிற்காக ரூ.4.82 கோடி நிதியுதவியை முதல்வர் வழங்கினார்.

தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்களைக் குழுவாக ஒன்றிணைத்து உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், உபரி விளைபொருட்களைத் திரட்டவும், 183 உற்பத்தியாளர் குழுக்களுக்குத் தலா ரூ.75,000/- வீதம் ரூ.1.37 கோடி ரூபாய் திட்ட தொடக்க நிதியுதவி, நுண் தொழில் நிறுவன நிதியாக 569 பயனாளிகளுக்கு ரூ.1.99 கோடி ரூபாய் நிதியுதவியை முதல்வர் வழங்கினார்.

வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 10,714 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.464.16 கோடி வங்கிக் கடன், 73 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.22.16 கோடி வங்கி பெருங்கடன், 45 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறு தொழில் மேம்பாட்டு கடன் உத்தரவாத நிதியாக ரூ.5.24 கோடி நிதியுதவி, நகர்ப்புறத்தில் உள்ள 590 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தலா ரூ.10,000/- வீதம் ரூ.59 லட்சம் சுழல்நிதி, 151 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.76 லட்சம் சுழல் நிதியை முதல்வர் வழங்கினார்.

சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் 985 நபர்களுக்கு ரூ.4.98 கோடி, 528 தொழில் குழுக்களுக்கு ரூ.23.36 கோடி, 76 ஒத்த விருப்பக் குழுக்களுக்கு ரூ.70 லட்சம், 1,470 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.60.85 கோடி மற்றும் 43 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.65 லட்சம் தொழில் தொடங்கிட வங்கிக் கடன் என மொத்தம் ரூ.698.86 கோடி நிதியுதவியைத் தமிழக முதல்வர் இன்று பயனாளிகளுக்கு வழங்கினார்.

ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் பாரம்பரிய மற்றும் அதிக வருமானம் தரும் தொழில்களில், அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு, இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து வேலைவாய்ப்பினைப் பெற்றுத் தர 18,000 இளைஞர்களுக்கு சமுதாயத் திறன் பள்ளிகள் மூலம் தொழில் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்த நிதியாண்டில் 1000 கிராம ஊராட்சிகளில் உள்ள 18,000 இளைஞர்களுக்கு வெல்டிங், எலெக்ட்ரீசியன், பிளம்பர், மண்பாண்டம், தையல், உணவு பதப்படுத்துதல், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்த்தல் போன்ற தொழில் திறன் பயிற்சிகள் வழங்கிடும் வகையில், மாவட்டத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் 23 மாவட்டங்களில் 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 23 சமுதாயத் திறன் பள்ளிகளைத் தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்து, இளைஞர்கள் தொழில் திறன் பயிற்சி பெறுவதற்கும், தொடர்ந்து தொழில் செய்வதற்கும் தேவையான உபகரணங்கள் அடங்கிய தொழில் திறன் பயிற்சி பெட்டகத்தை ஒரு இளைஞருக்கு வழங்கினார்.

உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பில் உள்ள திறன் இடைவெளிகளைக் கண்டறிந்து, தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சிகளை வழங்கவும், உற்பத்திச் செலவைக் குறைத்து, வருமானத்தைப் பெருக்குவதற்கும் உரிய பயிற்சிகள் வழங்கிட, 2000 சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் தொடங்கப்படும், அதில் 74,000 உற்பத்தியாளர்களுக்கு மண், நிலத்தடி நீர்ப் பரிசோதனை, இயற்கை உரம் பயன்பாடு, நுண்ணீர்ப் பாசனம், ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். இந்த சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் மூலம் 30 முதல் 50 உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் பயன்பெறுவர்.

அதன்படி தமிழக முதல்வர் மாவட்டத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் 23 மாவட்டங்களில் 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 23 சமுதாயப் பண்ணைப் பள்ளிகளை இன்று தொடங்கி வைத்து, இவர்கள் அனைவரும் பண்ணைப் பயிற்சி பெறுவதற்கும், தொடர்ந்து உற்பத்தியைப் பெருக்குவதற்கும் தேவையான உபகரணங்கள் அடங்கிய பண்ணைப் பயிற்சி பெட்டகத்தை ஒரு சமுதாயப் பண்ணைப் பள்ளிக்கு வழங்கினார்.

மேலும், தீன்தயாள் உபாத்யாய ஊரக திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ், திறன் வளர்ப்புப் பயிற்சி பெற்ற ஊரகப் பகுதியைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற 50 இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரிய பணி அமர்வு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாகத் தமிழக முதல்வர் இன்று ஒரு இளைஞருக்குப் பணி அமர்வு ஆணையினை வழங்கினார்''.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x