Published : 21 Sep 2021 02:57 PM
Last Updated : 21 Sep 2021 02:57 PM
நாகப்பட்டினம், நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை உடனடியாகத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஈபிஎஸ் இன்று (செப்.21) வெளியிட்ட அறிக்கை:
"கடந்த 45 நாட்களுக்கும் மேலாக நாகப்பட்டினம் மாவட்டக் கடலோரப் பகுதிகளில், கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் நீர் சுமார் 100 மீட்டர் தூரம் ஊருக்குள் வந்துவிட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.
நாகப்பட்டினம் நகரம், நம்பியார் நகர் மீனவ கிராம மக்களுக்கு ஜெயலலிதா அரசு சிறு மீன்பிடித் துறைமுகம் கட்டுவதற்கு ஆணைகள் பிறப்பித்து, அதன்படி தற்போது சிறு மீன்பிடித் துறைமுகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இச்சூழ்நிலையில், கடந்த 45 நாட்களுக்கும் மேலாக, இந்தப் பகுதியில் கடல் கொந்தளிப்பு மிகவும் அதிகமாக உள்ளது என்று இப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். அதன்படி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் இல்ல அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இல்ல அலுவலகம் எதிரில் உள்ள நம்பியார் நகர் சிறு மீன்பிடி துறைமுகத்தின் வடக்குப் பக்கமாக, கடல் கொந்தளிப்பால் சுமார் 500 மீட்டர் நீளத்துக்கும் மேலாக கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் சுமார் 100 மீட்டர் நிலப் பகுதியினுள் உட்புகுந்துள்ளது. இதனால், சுமார் 10 வீடுகள், பல மின்கம்பங்கள் சேதமடைந்து விழுந்துவிட்டன.
கொந்தளிக்கும் கடலால் இப்பகுதியினுள் மேலும் கடல் நீர் உட்புகுந்து பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று இப்பகுதி மீனவ மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், இதனால் நாகப்பட்டினம் நகருக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற ஆபத்தான நிலையும் உள்ளது.
ஏற்கெனவே, 1994-95ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டபோது, அப்போதைய மாநிலங்களவை உறுப்பினரும், தற்போதைய வேதாரண்யம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலுக்கா, பிரதாவராமபுரம் ஊராட்சியில் உள்ள செருதூர் மீனவ கிராமத்தில் கடல் கொந்தளிப்பினால் கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் உட்புகுந்துள்ளது என்ற தகவலைச் சொன்னவுடன், ஜெயலலிதா உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்படி, கடல் அலைகளின் வேகத்தைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பனைமரங்கள் கடல் மணலில் புதைக்கப்பட்டு அலைகளின் வேகம் பெருமளவில் தடுக்கப்பட்டு, கடல் அரிப்பு முழுமையாக நிறுத்தப்பட்டது.
அதுபோல், இந்த திமுக அரசும் நாகப்பட்டினம் நகரிலேயே இருக்கும் நம்பியார் நகர் மீனவ கிராமம் உட்பட கடல் நீர் உட்புகுந்த அனைத்து இடங்களிலும் போர்க்கால அடிப்படையில் கடல் அரிப்பைத் தடுக்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT