Published : 21 Sep 2021 02:32 PM
Last Updated : 21 Sep 2021 02:32 PM

60 நாளில் முழுக் கொள்ளளவை எட்டிய மோர்தானா அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

மோர்தானா அணை முழுக் கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.

வேலூர்

தமிழக ஆந்திர எல்லையில் உள்ள மோர்தானா அணை 60 நாட்களுக்குள் மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டியதுடன் உபரி நீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை 11.50 மீட்டர் உயரமுடையது. இதன் முழுக் கொள்ளளவு 261.360 மில்லியன் கன அடியாகும். அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி ஆந்திர வனப்பகுதியில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால், அக்டோபர் மாதம் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. மேலும், நவம்பர் மாதம் ‘நிவர்’ புயல் பாதிப்பால் கிடைத்த அதிகபட்ச அளவாகக் கிடைத்த சுமார் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் முழுவதும் கவுன்டன்யா ஆற்றின் வழியாகச் சென்று பாலாற்றில் கலந்தது. மேலும், கால்வாய் வழியாகவும் ஏரிகளுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 11.40 அளவாகக் குறைந்தது.

இதற்கிடையில், பாசன விவசாயிகள் பயன்பாட்டுக்காக அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய் வழியாகத் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும், கடைமடை வரை தண்ணீர் செல்ல வசதியாக மோர்தானா அணை கால்வாய் சீரமைப்புக்காக ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், கடைமடை வரை உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து உறுதி செய்யப்பட்டது. தண்ணீர் திறப்பால் அணையின் நீர்மட்டம் கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி நிலவரப்படி பராமரிப்பு மற்றும் பயன்படுத்த முடியாத நீர் இருப்பு அளவாக 3.65 மீட்டர் என்றளவில் இருந்தது.

பச்சகுப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தைக் கடந்து செல்லும் வெள்ளநீர்.

அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வரத்து மீண்டும் ஏற்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அணையின் நீர்மட்டம் நேற்று (செப்.20) மாலை 5 மணியளவில் 11.35 மீட்டராக உயர்ந்தது. அணை முழுக் கொள்ளளவை எட்ட 0.15 மீட்டர் மட்டுமே இருந்தது.

அணைக்குப் போதுமான அளவு நீர்வரத்து இருந்ததால் முழுக் கொள்ளளவை இரவு எந்த நேரமும் எட்டிவிடும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மோர்தானா கிராமத்தில் தொடங்கி மீனூர்மலை வரை கவுன்டன்யா ஆற்றின் கரையோர மக்களுக்கு வருவாய்த் துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்ததுடன் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், மோர்தானா அணை இன்று (செப்.21) காலை 5 மணி நிலவரப்படி முழுக் கொள்ளளவை எட்டியது. அணைக்கு 90 கன அடி வீதம் நீர்வரத்து இருந்த நிலையில் அது அப்படியே வெளியேற்றப்பட்டது.

மோர்தானா அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் எதிர்வரும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கிடைக்கும் தண்ணீர் முழுவதும் மீண்டும் கவுன்டன்யா ஆற்றில் திறந்து விடப்பட்டு, ஏரிகளுக்குத் தண்ணீர் வரத்து திருப்பிவிடப்பட வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x