Published : 21 Sep 2021 02:12 PM
Last Updated : 21 Sep 2021 02:12 PM
நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதால், விபத்துக் காலங்களில் 'ஏர் பேக்' (air bag) செயல்பட முடியாத நிலை ஏற்படுவதாகவும், மேலும் எதிர் வாகனம் மற்றும் பொதுமக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்படுகிறது என்றும், நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த மத்திய அரசும் தடை விதித்தது.
மத்திய அரசின் தடையை மீறி நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்தப்படுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் லெனின் பால் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுமக்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் வாகனங்களில் கூட இதுபோன்ற தடை செய்யப்பட்ட பம்பர்கள் பொருத்தப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்தது.
இதையடுத்து, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பொருத்திய பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதையடுத்து, மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று (செப். 21) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், பம்பர்களால் வாகன விபத்து ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை என்றும், வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1980 முதல் வானங்களில் பம்பர் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பம்பர், வாகனங்களுக்கான கூடுதல் வசதி மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களின் பாதுகாப்பு மிக அவசியம் என்று கருத்து தெரிவித்தனர். பம்பர் பொருத்திய வாகனங்களின் ஓட்டுநர்கள் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவார்கள் எனக் குறிப்பிட்டனர். பொதுமக்களின் நலன் கருதியே மத்திய அரசு இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது மத்திய அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உத்தரவிட்டுள்ளனர்
மத்திய அரசின் உத்தரவை மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மாநில அரசு கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT