Published : 21 Sep 2021 02:05 PM
Last Updated : 21 Sep 2021 02:05 PM
ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் கழுவுகிற மீனில் நழுவும் மீன் நானல்ல, நாங்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குழிபிறையில் நேற்று முன்தினம் (செப்.19) நூலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரின் விடுதலை குறித்து ஏற்கெனவே பணியாற்றிய ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய ஆளுநர் ரவியிடம் அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை. மேலும், கடிதம் வாயிலாகக் குடியரசுத் தலைவருக்குத் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்" எனச் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரின் விடுதலையில், சட்டத்துறை அமைச்சரின் செயல்பாடானது கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் போன்று உள்ளது. எனவே, திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மத்திய அரசை வலியுறுத்தி 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ்ஸின் அறிக்கைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் இன்று நடைபெற்ற திமுக கொடியேற்ற நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார்.
அப்போது அவர் கூறும்போது, ''ஏழு பேர் விடுதலை விவகாரத்தை திமுக ஒருபோதும் நீர்த்துப்போகச் செய்யாது. நீர்த்துப் போகவும் விடமாட்டோம். ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலினைவிட வேறு யாரும் அதிக அக்கறை செலுத்த முடியாது. அதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கழுவுற மீனில் நழுவுற மீன் நான் அல்ல. நாங்கள் மிக நேர்மையானவர்கள்'' என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT