Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

டெல்டா மாவட்டங்களில் தொடரும் மழை: சம்பாவுக்கு சாதகம்; குறுவைக்கு பாதகம்

திருச்சி

காவிரி டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது பெய்து வரும் மழை சம்பா சாகுபடி பணிகளுக்கு சாதகமாக இருப்பதாக கருதப் பட்டாலும், குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டு அறு வடைக்கு தயாராக உள்ள பயிர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.64 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 1.37 லட்சம் ஏக்கர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 1.30 லட்சம் ஏக்கர் என மொத்தம் 4.31 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

இம்மாவட்டங்களில் வடிமுனை குழாய் வசதியுள்ள பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களில் நடவு செய்யப்பட்ட முன்பட்ட குறுவை நெற்பயிர்கள் அறுவடை ஆகஸ்ட் மாத பிற்பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கரிலும், திரு வாரூர் மாவட்டத்தில் 36 ஆயிரம் ஏக்கரிலும், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 70 ஆயிரம் ஏக்கரிலும் அறுவடைப் பணிகள் முடிவுற்றுள்ளன. இன்னும் ஏறத்தாழ 2.65 லட்சம் ஏக்கரில் பயிர்கள் அறுவடை செய்யப்படாமல் உள்ளன.

ஆனால் இம்மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வயல்களிலேயே பயிர்கள் சாய்ந்து முளைத்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஆனால், அதே சமயம், இந்த மழை சம்பா சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக சம்பா சாகுபடி மேற்கொள்ளத் தொடங்கியுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இயல்பை விட கூடுதல் மழை

டெல்டா மாவட்டங்களில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் (19-ம் தேதி) வரையிலான காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பான அளவை விட அதிக அளவிலேயே மழை பெய்துள்ளது.

ஜூன் 1-ம் தேதி முதல் செப்.19-ம் தேதி வரையிலான காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 324.7 மி.மீ (இயல்பான அளவு 265.8 மி.மீ), திருவாரூர் மாவட்டத்தில் 257.6 மி.மீ (இயல்பான அளவு 254.6 மி.மீ), நாகை மாவட்டத்தில் 270.6 மி.மீ (இயல்பான அளவு 211.8 மி.மீ), மயிலாடுதுறை மாவட்டத்தில் 281 மி.மீ (இயல்பான அளவு 256.8 மி.மீ) மழை பெய்துள்ளது.

மகசூல் இழப்பு

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

டெல்டா மாவட்டங்களில் தற்போது தொடங்கியுள்ள சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்யவும், நாற்று விடுதல், நடவுப் பணி ஆகியவற்றுக்கும் இந்த மழை சாதகமாக இருந்தாலும், விட்டு விட்டு பெய்யும் மழையை கணிக்க முடியாமல் அறுவடைப் பணிகளை திட்டமிட முடியவில்லை என்பதால், குறுவை பயிர்களின் அறுவடைக்கு இந்த மழை பாதகமாகவே அமைந்துள்ளது.

இந்த மழை எதிர்பாராத ஒன்று தான். மழை தேவை தான் என்றாலும் குறுவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மகசூல் இழப்பை ஏற்படுத்தும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x