Published : 20 Sep 2021 02:20 PM
Last Updated : 20 Sep 2021 02:20 PM
அதிமுக எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் தொடர்ந்த தேர்தல் வழக்கில், தேர்தல் ஆணையம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விட 11 ஆயிரத்து 932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அதிமுக எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன், தனது வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்துள்ளதாகவும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், வாக்குப்பதிவுக்கு முன் கடைசி 48 மணி நேரம், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த உச்சவரம்புக்கு அதிகமாக தேர்தல் செலவு செய்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, தேர்தல் ஆணையம், அதிமுக எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆறு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT