Published : 20 Sep 2021 12:41 PM
Last Updated : 20 Sep 2021 12:41 PM
மாநிலங்களவைத் தேர்தலில் ஆளும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே தொடர் இழுபறி நீடித்து வருகிறது. முதல்வர் ரங்கசாமி பிடி கொடுக்காததால் பாஜக மாநிலத் தலைவர், பாஜக சட்டப்பேரவைத் தலைவர் ஆகியோர் டெல்லி விரைந்துள்ளனர். இச்சூழலில் ராஜ்நிவாஸில் ஆளுநர் தமிழிசையை முதல்வர் ரங்கசாமி திடீரென்று சந்தித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரேயொரு மாநிலங்களவை இடத்திற்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் 4-ம் தேதி நடைபெற உள்ளது, இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 22-ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் யார் தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆட்சியில் உள்ள நிலையில் பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் இடையே யார் வேட்பாளரை நிறுத்துவது என்று இறுதி செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வருகிறது.
புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சீட் ஒதுக்க வலியுறுத்தி பாஜக மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி கடந்த வெள்ளிக்கிழமையன்று முதல்வர் ரங்கசாமியிடம் கொடுத்தனர். அதற்கு முதல்வர் ரங்கசாமி இதுவரை எந்த முடிவும் அறிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது. கட்சித் தலைமை அறிவுறுத்தல்படி ரங்கசாமியைச் சந்தித்தும் விடை கிடைக்கவில்லை. பாஜக தலைமையிடம் பேசுவதாக ரங்கசாமி தெரிவித்து அவர்களை வழியனுப்பினார்.
முதல்வர் ரங்கசாமி எம்.பி. சீட் ஒதுக்கீட்டில் பிடி கொடுக்காமல் இருப்பதால் டெல்லிக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் விரைந்துள்ளனர். டெல்லியில் பாஜக தலைமையைச் சந்தித்து தகவலைத் தெரிவிப்பதுடன் அங்கிருந்து பாஜக தலைமை முதல்வர் ரங்கசாமியிடம் பேச உள்ளது. அதையடுத்தே விடை கிடைக்கும்.
முதல்வர் - ஆளுநர் திடீர் சந்திப்பு
இச்சூழலில் முதல்வர் ரங்கசாமி ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்று ஆளுநர் தமிழிசையைச் சந்தித்தார். பரபரப்பான சூழலில் ஆளுநரைச் சந்தித்தது தொடர்பாக அவர் வழக்கம்போல் எப்பதிலும் தரவில்லை.
ஆளுநர் மாளிகை தரப்பு இச்சந்திப்பு தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், "புதுச்சேரி அரசு மருத்துவமனைகளை உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தி சிகிச்சை தருவது தொடர்பாக ஆளுநரும், முதல்வரும் ஆலோசித்தனர். புதுச்சேரியை வருங்காலத்தில் மருத்துவத் தலைநகரமாக மேம்படுத்தவும், மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கவும் பேசினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT