Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM
கரோனா தடுப்பூசி போடுபவர்களை ஊக்குவிக்கும் வகையில், வீட்டுமனைப் பட்டா, தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்குவதாக பவானி வட்டாட்சியர் அறிவித்ததால் மக்கள் உற்சாகமாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், பவானியில் 39 மையங்கள், அம்மாப்பேட்டையில் 63 மையங்களில் நேற்று கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமுக்கு வரும் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில், தடுப்பூசி போட வருபவர்களை, குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும் என பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதன்படி, தடுப்பூசி போடுபவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் பரிசாக ஒரு கிராம் தங்கக் காசு 4 பேருக்கும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் 4 பேருக்கும், 3-ம் பரிசாக ரூ.500 மதிப்புள்ளபுடவைகள், ரூ.500 மதிப்புள்ள வேட்டிகள் தலா 10 பேருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆறுதல் பரிசாக 4 பேருக்கு ரூ.400 மதிப்புள்ள ரீ-சார்ஜ் கூப்பன்கள் வழங்கப்படும் எனவும் வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
அத்துடன், சிறப்புப் பரிசாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் 10 ஏழை, எளிய மக்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தலா 2 சென்ட் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் கூறியதாவது:
பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த வாரம் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோன்று இன்று (நேற்று) நடைபெறும் தடுப்பூசி முகாமிலும், பொது மக்களுக்கு ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் அம்மாப்பேட்டை ஒன்றியம் மற்றும் பவானி ஒன்றியத்தில் ஆண்டி குளம், ஒரிச்சேரி, சின்னப்புலியூர், ஓடத்துறை ஊராட்சி பொதுமக்கள் இந்தக் குலுக்கல் பரிசுத் திட்டத்தில் பங்கேற்க முடியாது. தன்னார்வலர்கள் உதவியுடன் பரிசுப் பொருட்களைப் பெற்று, தேர்வாளர்களுக்கு வழங்குகிறோம். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, தேர்வு பெற்றவர்களில் வீடு இல்லாத 10 பேருக்கு அரசின் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவுள்ளது என்றார். வட்டாட்சியரின் இந்த முயற்சியால், கடந்த முகாமின்போது பவானி, அம்மாப்பேட்டையில் 14 ஆயிரம் பேருக்கும், நேற்றைய முகாமில் 10 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி போட்டு இலக்கு எட்டப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT