Published : 08 Feb 2016 10:48 AM
Last Updated : 08 Feb 2016 10:48 AM
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நான்கு மகாமகத்துக்குப் பிறகு (48 ஆண்டுகள்) வரும் 20-ம் தேதி மகாமகத் தேரோட்டம் நடைபெற உள்ளது.
மகா பிரளயத்துக்குப் பிறகு இத்தலத்தில் ஈசன் எழுந்தருளி, மண்ணையும், அமுதத்தையும் கொண்டு உருவாக்கிய லிங்கத்துக்கு பூஜை செய்து, அதில் ஐக்கியமாகியுள்ளதாக ஐதீகம். இங்கு ஈசனுக்குப் பெயர் ஆதிகும்பேஸ்வரர்.
மகாமகத் திருவிழாவின் முதன்மையான கோயிலாகத் திகழும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவின்போது கொடியேற்றப்பட்டு, 4-ம் நாள் அறுபத்து மூவர் வீதியுலாவும், 5-ம் நாள் ஓலைச்சப்பரமும், 8-ம் நாள் தேரோட்டமும், 10-ம் நாள் தீர்த்தவாரியும் நடைபெறும்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறவுள்ளன.
1968-ல் தேரோட்டம்
கடந்த 1968-ல் நடைபெற்ற மகாமகத் திருவிழாவின்போது ஆதிகும்பேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அதன்பிறகு, ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவின்போது மட்டுமே தேரோட்டம் நடைபெற்றது.
பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்ததால் 1968, 1980, 1992, 2004-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மகாமகத் திருவிழாவின்போது ஆதிகும்பேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெறவில்லை.
தற்போது நடைபெற உள்ள மகாமகப் பெருவிழாவை சிறப் பாகக் கொண்டாடும் வகையில், இவ்வாண்டு தேரோட்டம் நடத்த வேண்டுமென பக்தர்கள் விரும் பியதால், 48 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிகும்பேஸ்வரர் கோயில் தேரோட்டம் மகாமகப் பெருவிழா வின்போது நடைபெறவுள்ளது.
இதன்படி, வரும் 20-ம் தேதி காலை 5 மணிக்கு விநாயகர், முருகன் தேரும், 8 மணிக்கு கும்பேஸ்வரர், அம்பாள் தேரும், அன்று மாலை 7 மணிக்கு சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடைபெறவுள்ளது. இதற்காக கும்பேஸ்வரர் கோயில் தேருக்கு சாரம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
வாகனங்கள் நுழைய தடை
வரும் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் மகாமகப் பெருவிழாவையொட்டி கும்பகோணம் நகரில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக, கும்பகோணம் நகரில் காலை நேரங்களில் வாகனங்கள் நுழைய நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பொருட்கள் ஏற்றி வரும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் வரும் 23-ம் தேதி வரை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணிவரை கும்பகோணம் நகருக்குள் சென்று, பொருட்களை ஏற்றி, இறக்கிக் கொள்ளலாம். பகல் நேரத்தில் நகருக்குள் கனரக வாகனங்கள் நுழையக் கூடாது என்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
மகாமக குளத்தில் நீராட பக்தர்கள் ஆர்வம்
கும்பகோணம் மகாமக குளத்தைச் சுற்றியிருந்த இரும்பு கேட்டுகள் அகற்றப்பட்டதால், நேற்று காலை ஏராளமான பக்தர்கள் குளத்தில் புனித நீராடினர். ஒவ்வொரு தீ்ர்த்த கிணற்றுக்கும் சென்று, அதிலிருந்த தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டனர்.
வெளியூர்களிலிருந்து வந்த பக்தர்கள் குளத்தில் குளித்துவிட்டு, பாட்டில்களில் தண்ணீரை எடுத்துச் சென்றனர். சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு, குளத்தில் பொதுமக்களை இறங்க விடாமல் தடுத்தனர். இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகினர்.
சக்கரை படித்துறையில் பணிகள் தீவிரம்
மகாமகத் திருவிழாவின்போது வைணவத் தலங்களான சக்கரபாணி, சாரங்கபாணி, ஆதிவராகப் பெருமாள், ராஜகோபால சுவாமி, ராம சுவாமி கோயில்களின் தீர்த்தவாரி காவிரி ஆற்றின் சக்கரை படித்துறையில் நடைபெறும்.
இதையொட்டி, காவிரி ஆற்றின் சக்கரை படித்துறையில் பொதுப்பணித் துறை சார்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்குமிடத்தில் சகதி அகற்றப்பட்டு, ஆற்று மணல் நிரப்பப்படுகிறது. இதுதவிர, கரையின் மேல் சுவாமி, தாயார் எழுந்தருளும் இடத்தில் உள்ள மண்டபத்தை சீரமைத்து, அங்கு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றில் 80 ஆயிரம் மணல் மூட்டைகள்
கும்பகோணம் மகாமக விழாவின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் மகாமக குளம் மட்டுமின்றி காவிரி ஆற்றிலும் நீராடுவார்கள்.
காவிரி ஆற்றில் நீராட வசதியாக தண்ணீர் தேக்கிவைக்கப்பட உள்ளது. இதற்காக சோழன் நகர், மேலக்காவேரி, கொட்டையூர் ஆகிய இடங்களில், சுமார் 80 ஆயிரம் மணல் மூட்டைகளைக் கொண்டு காவிரியில் தற்காலிக தடுப்பணை அமைக்கப்படும்.
அதேபோல, அரசலாற்றில் தாராசுரம் முதல் அண்ணலக்ரஹாரம் வரை மணல் மூட்டைகளை கொண்டு தண்ணீர் தேக்கிவைக்கப்படும். இதற்கான மணல் மூட்டைகளைத் தயாரிக்கும் பணியில் பொதுப்பணித் துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ராஜகோபால சுவாமி கோயிலில் வாகனங்களுக்கு தங்க கவசம்
மகாமகத்தையொட்டி கும்பகோணம் ராஜகோபால சுவாமி கோயிலில் வரும் 14-ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. இங்கு 10 நாட்களுக்கு உற்சவம் நடைபெறும். அப்போது, இந்திர வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். இந்நிலையில், சென்னை, கும்பகோணம் பக்தர்கள் சார்பில் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் 6 வாகனங்களுக்கும் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. தாமிரத் தகடுகளில் தங்க முலாம் பூசப்பட்டு, இந்தக் கவசங்கள் வரும் 12-ம் தேதி அந்தந்த வாகனங்களுக்கு அணிவிக்கப்பட உள்ளன.
கருட வாகனத்துக்கு தங்கக் கவசம் தயாரிக்கும் கோயில் ஊழியர்கள்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்
கண்ணாடி பல்லக்கு வெள்ளோட்டம்
மகாமகத்தையொட்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் சப்தஸ்தான கண்ணாடி பல்லக்கு உருவாக்கப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி இந்தப் பல்லக்கில் அமிர்த தீர்த்தத்தை வைத்து, கும்பேஸ்வரர் கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு சென்று மகாமகக் குளத்தில் அமிர்த நீரை கலக்க உள்ளனர்.
இதையொட்டி, சப்தஸ்தான கண்ணாடி பல்லக்கு வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. கும்பேஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள தேரோடும் வீதியில் இந்த வெள்ளோட்டம் நடைபெற்றது.
ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நேற்று நடைபெற்ற சப்தஸ்தான கண்ணாடி பல்லக்கு வெள்ளோட்டம்.
படம்: வி.சுந்தர்ராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT