Published : 17 Feb 2016 10:44 AM
Last Updated : 17 Feb 2016 10:44 AM
முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் நவீன அறுவை சிகிச்சை
மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பிறவியிலேயே காது கேளாத 2 குழந்தைகள், அரசு மருத்துவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சை மூலம், சராசரி குழந்தைகளைப் போல காது கேட்கும் திறன் பெற்றுள்ளனர். சுமார் 8 லட்சம் ரூபாய் வரை செலவாகும் இந்த நவீன அறுவை சிகிச்சை, முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு பைசா செலவின்றி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை முனிச்சாலையை சேர்ந் தவர் சுரேஷ். இவரது மனைவி ஆர்த்தி. இவர்களது இரண்டரை வயது குழந்தை அஜய். விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது மனைவி நாகராணி. இவர்களின் 3 வயது பெண் குழந்தை ருத்ரபிரியா. இந்த 2 குழந்தைகளுக்கும் பிறவியிலேயே கேட்கும் மற்றும் பேசும் திறன் இல்லாமல் இருந்துள்ளது. தாமதமாக பேசுவர் என இவர்களுடைய பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர்.
ஒரு கட்டத்தில் சராசரி குழந்தை கள்போல கேட்கும், பேசும் திறன் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தனியார் மருத்துவ மனைகளில் அறுவை சிகிச்சை மூலம் குணமாக்க ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் எனக் கூறியுள்ளனர். அதனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இம்ப்ளான்ட் சிகிச்சை
காது மூக்கு தொண்டைப் பிரிவு தலைவர் பேராசிரியர் தினகரன், மருத்துவர்கள் சிவசுப்பிரமணியன், சரவணமுத்து, அருள், ராஜ கணேஷ், பரமசிவம், கங்கா குழுவினர், சிறப்பு மருத்துவ நிபுணர் மோகன் காமேஸ்வரன் தலைமையில் இந்த குழந்தை களை பரிசோதனை செய்து, முதல்வரின் இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் காக்ளியர் இம்ப்ளான்ட் சிகிச்சை செய்தனர். இந்த சிகிச்சையால் தற்போது இந்த குழந்தைகள் கேட்கும் திறனை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் எம்.ஆர்.வைரமுத்து ராஜு நேற்று கூறியதாவது:
தழும்பின்றி சிகிச்சை
காதுகேட்கும் திறன் இழந்த குழந்தைகள் அஜய், ருத்ரபிரியா வுக்கு காதுக்குப் பின்புறம் தழும்பின்றி அறுவை சிகிச்சை செய்து, உள் காது எலும்பில் பாதிக்கப்பட்ட நரம்புக்குப் பதில் செயற்கை காது கேட்கும் திறன் பெற்ற எலெக்ட்ரோடு நரம்பு பொருத்தினோம்.
காதின் பின்புறம், சவுண்டு ஆம்ப்ளிபயர் சிமுலேட்டர் மிஷின் வைத்தோம்.
வீடியோ ஆடியோ பயிற்சி
இந்த மிஷின் சத்தங்களைப் பெற்று, உள்காதில் செயற்கையாக பொருத்தப்பட்ட நரம்புக்கு கொண்டு சென்று காது கேட்கும் திறனை குழந்தைகளுக்கு அளிக் கிறது. இந்த சிகிச்சையால் சராசரி குழந்தைகளைப்போல இந்த குழந்தைகள் தற்போது காது கேட்கும் திறனை பெற்றுள்ளனர். தற்போது இந்த குழந்தைகளுக்கு ஆடியோ, வீடியோ பேசும் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. விரை வில் பேசும் திறனையும் பெற்று விடுவர். இந்த சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் செலவாகியுள்ளது.
முதல்வரின் காப்பீட்டுத் திட்டத் தில் இந்த குழந்தைகளுக்கு இலவச மாக காக்ளியர் இம்ப்ளான்ட் சிகிச்சை செய்துள்ளோம். குழந்தையின் மூளை வளர்ச்சி 7 வயது வரையே இருக்கும்.
அதனால், இந்த சிகிச்சையை குழந்தை களுக்கு 6 வயதுக்குள் செய்ய வேண்டும். அதற்குப்பின் சிகிச்சை மேற்கொண்டாலும் காதுகேட்கும் திறனை குழந்தைகள் பெறாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிறவியிலேயே கேட்கும் திறன் இழப்புக்கு என்ன காரணம்? காது மூக்கு தொண்டை துறை உதவி பேராசிரியர் டாக்டர் சிவசுப்பிரமணியன் கூறியதாவது: இந்தியாவில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 5 முதல் 6 குழந்தைகள் பிறவியிலேயே கேட்கும் திறனை இழக்கின்றனர். இதற்கு 50 சதவீத காரணம் உறவுகளிலே திருமணம் செய்வது. 20 முதல் 30 சதவீதம் வைரஸ் நோய் பாதித்த தாயிடம் இருந்து தொப்புள் கொடி மூலம் குழந்தைகளுக்கு கிருமி பரவுவது. மீதி கண்டுபிடிக்க முடியாத காரணத்தாலும் காது கேட்கும் திறனை இழக்கின்றனர். குழந்தை பிறந்து 3 மாதங்களிலேயே சத்தத்தை கேட்கும் திறனைப் பெறுகிறது. ஆறு மாதங்களில் வார்த்தைகளை உச்சரிக்கவும், ஒரு வயதில் வார்த்தைகளை தெளிவாகப் பேசி, பின் சொற்றொடராக உரையாட முனைவது வழக்கம். இந்த ஆரம்ப கட்ட நிகழ்வுகள் தாமதமாக நடப்பது, அல்லது எவ்வித சத்தத்துக்கும் பதிலளிக்காமல் இருப்பதுதான் குறைபாட்டுக்கான முதல் அறிகுறி. இவ்வாறு அவர் கூறினார். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT