Published : 19 Sep 2021 08:04 PM
Last Updated : 19 Sep 2021 08:04 PM
புதுச்சேரி மெரினாவில் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் கடற்கரைகள், பூங்காக்கள் எனப் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இந்நிலையில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வம்பாக்கீரைப்பாளையம் கலங்கரை விளக்கம் அருகே கடற்கரை பகுதி மேம்படுத்தப்பட்டு ‘பாண்டி மெரினா’அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள இயற்கையான மணல்பரப்பு பகுதியில் கல் இருக்கைகள், குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பிரெஞ்சு கட்டிடக்கலை வடிவில் வணிக வளாகம் அமைக்கப்பட்டு பலவிதமான உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. சிறுவர்கள், இளைஞர்களைக் கவரும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், குதிரை சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் குடும்பத்துடன் வந்து பொழுதைக் கழித்துவிட்டுச் செல்கின்றனர். கரோனா தொற்று ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குப் பிறகு தற்போதுதான் மெல்ல மெல்ல சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வெளியே வர ஆரம்பித்துள்ளனர். இதனால் சுற்றுலாத் தலங்கள் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளன.
இதுபோல் பாண்டி மெரினா கடற்கரைக்கும் தற்போது அதிக அளவில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பாண்டி மெரினாவுக்கு வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு திடீரென பார்க்கிங் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர்.
இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10-ம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.30-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதுவும் அடிக்காசு கடைகளுக்குக் கொடுக்கப்படும் கட்டண ரசீதைக் கொடுத்து பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் இங்கு வரும் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வசூலால் பலர் திரும்பிச் செல்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதிக செலவின்றிப் பொழுதுபோக்க வரும் மக்களிடம் வாகனக் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்துப் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் தரப்பில் கூறும்போது, ‘‘குடும்பத்துடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க கடற்கரை உள்ளிட்ட பகுதிக்கு வருகிறோம். அதிக செலவின்றி வந்து செல்ல கடற்கரை, பூங்கா வசதியாக இருந்தது. ஆனால், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி அவசரக் கோலத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கின்றனர்.
இதுபோல் வசூலிப்பது கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களின் வருகையை வெகுவாக பாதிக்கும். ஏற்கெனவே கடற்கரை சாலையில் இருந்து பழைய துறைமுகம் செல்லும் சாலையில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது மிகுந்த இன்னலை ஏற்படுத்துகிறது. எனவே, அரசு இதில் தலையிட்டு வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும்’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT