Published : 19 Sep 2021 05:32 PM
Last Updated : 19 Sep 2021 05:32 PM
யாரும் சீருடை அணியாத சூழலில் பல்நோக்குப் பணியாளர்களுக்குச் சீருடை, சலவைப்படிக்காக அரசு பல கோடி ரூபாய் செலவிடுவதை மறுபரிசீலனை செய்யக்கோரி ஆளுநர், முதல்வரிடம் மனு தரப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் அனைத்துத் துறைகளிலும் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட பல்நோக்குப் பணியாளர்கள் (MTS) பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மஸ்தூராக (குரூப் - டி) இருந்தபோது சீருடை அணிந்து பணிபுரிந்து வந்தனர். அப்போது, அரசு சீருடை மற்றும் சலவைப்படி வழங்கி வந்தனர்.
இந்நிலையில், மஸ்தூர் ஊழியர்கள் அனைவரும் குரூப்-சி பல்நோக்கு ஊழியர்களாக மாற்றப்பட்டு அவரவர்களுக்குத் தெரிந்த பணிகளான டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர்கள் என, அவரவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப பிற அலுவலகப் பணிகள் செய்து வருவதால், இவர்கள் எவரும் தற்பொழுது சீருடை அணிந்து பணிபுரிவதில்லை.
இருப்பினும், அரசு அவர்களுக்குச் சீருடை மற்றும் சலவைப்படி வழங்கி வருகிறதா எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்களை ராஜீவ்காந்தி மனித உரிமை விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி, தலைமைச் செயலக நிர்வாகப் பிரிவு, பொதுப்பணித்துறை (பொது சுகாதாரக் கோட்டம்) மற்றும் கல்வித்துறை ஆகிய துறைகளில் கேட்டார். அவர்கள் தகவல் அளித்தனர்.
இது தொடர்பாக ரகுபதி கூறுகையில், "தலைமைச் செயலகத்தில் 57 பேரும், பொதுப்பணித் துறையில் பொது சுகாதாரக் கோட்டத்தில் 1,141 பேரும், கல்வித்துறையில் 324 பேரும் என, 1,522 பேருக்குச் சீருடை, சலவைப்படி என, ஆண்டுக்கு ரூ. 26.80 லட்சம் செலவு செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியிலுள்ள அனைத்துப் பல்நோக்குப் பணியாளர்களுக்கும் சீருடை, சலவைப்படி வழங்கினால், பல கோடி ரூபாய் செலவு அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும். குறிப்பாக, பொதுப்பணித் துறையில் பல்வேறு கோட்டங்கள் உள்ளன. அனைத்துக் கோட்டங்களிலும் சேர்த்து 2,744 பல்நோக்குப் பணியாளர்கள் உள்ளனர். அத்துறைக்கு மட்டும் ரூ.1.37 கோடி ஆண்டுக்கு செலவிடப்படுகிறது.
கோடிக்கணக்கில் செலவு செய்து சீருடை, சலவைப்படி வழங்கினாலும் பல்நோக்குப் பணியாளர்கள் அனைவரும் சீருடை அணியாமல் அவரவர் விருப்பமான ஆடையைத்தான் அணிகின்றனர். இதைத் துறை அதிகாரிகளும் கேட்பதில்லை. அரசு நிதிதான் வீணாகிறது. செவிலியர், காவல்துறை போன்று பல்நோக்குப் பணியாளர்கள் அரசு அலுவலகங்களில் சீருடை அணிந்து பணிபுரிவதில்லை. சீருடை அணிந்து பணிபுரியாத பல்நோக்குப் பணியாளர்களுக்குச் சீருடை, சலவைப்படி வழங்குவதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று ஆளுநர், முதல்வரிடம் மனு தந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT