Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

உதகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமா படப்பிடிப்பு

உதகை பிரீக்ஸ் பள்ளியில் நடந்த தெலுங்கு சினிமா படப்பிடிப்பு. படம்: ஆர்.டி.சிவசங்கர்

உதகை

உதகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமா படப்பிடிப்பு நடந்தது.

இயற்கை எழில் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நாள்தோறும் ஏதேனும் ஒரு மொழி படப்பிடிப்பு நடக்கும். இந்தி, தமிழ், கன்னடம், மலையாள மொழி படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வந்தன. இதனால் சினிமா படப்பிடிப்புகளை நம்பியே மாவட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைத்து வந்தன.

உதகையைவிட வெளிநாடு..

நகராட்சி பகுதிகள், பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. கடந்த 2001-06-ம் ஆண்டு காலகட்டத்தில் நகராட்சி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம், பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த ரூ.50 ஆயிரம் என கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதால் உதகையில் நடக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. மேலும், வெளிநாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்துவதைவிட, உதகையில் படப்பிடிப்பு நடத்துவது மலிவாக இல்லாததால், உதகையை சினிமாத் துறையினர் கைவிட்டனர்.

மேலும், வெளிநாடுகளில் சுற்றுலாத் தொழில் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக, அங்கு சினிமா படப்பிடிப்பு நடத்த கட்டணம்ஏதும் விதிக்காத நிலையில், சிலநாடுகளில் விமான கட்டணத்தில் கூட சலுகை அளிப்பதாக சினிமாதயாரிப்பு மேலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக உதகையில் படப்பிடிப்புகள் நடத்தப்படுவது வெகுவாக குறைந்தது.

கடந்த சில ஆண்டுகளாக சினிமா படப்பிடிப்புகள் உதகையில் அரிதான நிலையில், கடந்த 2 நாட்களாக தெலுங்கு திரைப்பட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ‘அனி மன்ச்சி சகுமன்கலு’ என்ற திரைப்படம் உதகை பிரீக்ஸ் பள்ளியில் நடந்தது. இதில், சந்தோஷ் ஷோபன் நாயகனாகவும், ‘குக்கூ’புகழ் மாளவிகா நாயர் நாயகியாவும் ‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் ஆகியோரும் நடித்து வருகின்றனர். தெலுங்கில் ஹிட்அடித்த ‘ஓ பேபி’ புகழ் நந்தினி ரெட்டி இயக்குகிறார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘இது என்னுடைய 5-வதுபடம். தேயிலை மற்றும் காபிதோட்டங்கள் அமைந்த பகுதிகளைக் கொண்டது கதைக்களம். அதனால், நீலகிரியை தேர்ந்தெடுத்தோம். 80 சதவீத படப்பிடிப்பு இங்கு நடக்கிறது. இங்குள்ள காலநிலை, கலாச்சாரம் படத்தில் இடம் பெறுகிறது’ என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடத்த இடங்களைத் தேர்வு செய்யும் தயாரிப்பு மேலாளர் ஏ.டி.லாரன்ஸ் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் முன்பு பல மொழி திரைப்படங்களின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும். ஆனால், தற்போது படப்பிடிப்புகள் குறைந்துவிட்டன. நீண்ட காலத்துக்கு பின்னர் தெலுங்கு திரைப்பட படப்பிடிப்பு குன்னூரிலும் தற்போது உதகையிலும் 40 நாட்கள் நடக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x