Last Updated : 18 Sep, 2021 07:58 PM

 

Published : 18 Sep 2021 07:58 PM
Last Updated : 18 Sep 2021 07:58 PM

தேங்கிய மழைநீர்; அளவு தெரியாமல் காரில் சென்ற பெண் மருத்துவர் பரிதாப பலி

புதுக்கோட்டை மாவட்டம் துடையூரில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மூழ்கிக் கிடக்கும் கார். | சி.சத்யா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கி காரில் சென்ற மருத்துவர் சத்யா நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே துடையூரைச் சேர்ந்தவர் சிவக்குமாரின் மனைவி சத்யா (32). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார்.

இவர், தனது மாமியார் ஜெயம் (67) என்பவருடன் துடையூருக்கு நேற்று இரவில் காரில் சென்று கொண்டிருந்தார். காரை சத்யா ஓட்டியுள்ளார். துடையூர் ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கி இருந்தது. அதன் வழியே லாரி கடந்து சென்றதை அறிந்த சத்யா, தனது காரை ஓட்டியுள்ளார்.

எனினும், அந்தக் கார் மழை நீருக்குள் சிக்கி, முன்னும் பின்னும் நகரவில்லை. தொடர்ந்து காரும் நீருக்குள் மூழ்கியது. இதையறிந்த, அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், சத்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். ஜெயம் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுரங்கப் பாதையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்திப் பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்த போலீஸார், கோட்டாட்சியர் முன்னிலையில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அதன்படி, குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில், காவல், ரயில்வே, வருவாய்த் துறையினருடன் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, சுரங்கப்பாதையை நிரந்தரமாக மூடுவது, ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த ரயில்வே கேட்டை திறந்து தற்காலிகப் பாதையாகப் பயன்படுத்துவது, கேட்டைப் பராமரிக்கப் பணியாளர் நியமிப்பது, இறந்த சத்யாவின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து நிவாரணம் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x