Published : 18 Sep 2021 05:05 PM
Last Updated : 18 Sep 2021 05:05 PM

முதல்வருடன் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்திப்பு: 5 கோரிக்கைகள் குறித்து மனு

கே.பாலகிருஷ்ணன் - முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று (செப்.18) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வி.பி.நாகை மாலி, முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பி. டில்லிபாபு ஆகியோர் சந்தித்து, சமீபத்தில் முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதற்கும், நீட் தேர்விலிருந்து விதிவிலக்குக் கோருகிற மசோதா நிறைவேற்றியதற்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, தீர்மானம் நிறைவேற்றியதற்கும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் அமைத்ததற்கும், இட ஒதுக்கீடு அமலாக்கப்பட்ட விதம் குறித்து கண்காணிக்க சமூக நீதி கண்காணிப்புக் குழு அமைத்ததற்கும், பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாகக் கொண்டாடுவது, விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி.யைப் பெருமைப்படுத்தும் அறிவிப்புகள் உள்ளிட்ட பல முற்போக்கான அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியும், பாராட்டுதல்களும் தெரிவித்தனர்.

மேலும், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக கீழ்வேளூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் வி.பி. நாகை மாலி நியமிக்கப்பட்டதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

புதிய வேளாண் சட்டம் மூலம் விவசாயத்தை முற்றாக கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைத்து நாட்டைச் சூறையாட முயலும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து செப்டம்பர் 27-ல் நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றியடையச் செய்ய திமுக ஆதரவு நல்கிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அதற்கு முதல்வர் ஏற்கெனவே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம், அத்தீர்மானத்துக்கு வலுசேர்க்கும் வகையில் போராட்டத்துக்கு ஆதரவு தருவோம் எனத் தெரிவித்தார்.

இத்துடன் கீழ்க்கண்ட முக்கியமான பிரச்சினைகள் குறித்து முதல்வரிடம் மனு அளித்து உடனடி நடவடிக்கை எடுக்கவும் வற்புறுத்தப்பட்டது.

1. தமிழகத்தில் சிறந்த ஆன்மிகவாதியாகவும் அதேசமயம் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவெறியை எதிர்த்து உறுதியாகப் போராடி வரும் பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளாரின் உயிருக்கு பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவர்களால் விடுக்கப்பட்டுவரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாத்திட அவருக்கு காவல் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

2. நெய்வேலி காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுப்பிரமணியன் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை வழங்கிட வேண்டும்.

3. மாற்றுத்திறனாளிகளுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும்.

4. மத்திய காலக் கடன்களாக மாற்றப்பட்ட குறுகிய கால வேளாண் கடன் பாக்கிகளை ரத்து செய்திட வேண்டும்.

5. பழங்குடியின மக்களுக்கு இனச் சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இக்கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

மேற்கண்ட கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்".

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x