Published : 18 Sep 2021 12:57 PM
Last Updated : 18 Sep 2021 12:57 PM
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுவார் என்று பாஜக தேசியத் தலைமை அறிவித்துள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்தவர் எல்.முருகன். கடந்த ஜூலை மாதம் பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதில், எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாத மத்திய அமைச்சர்கள் அனைவரும், 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற வேண்டும் என்று விதி உள்ளது. அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் எல்.முருகன் பாஜகவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், ''மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ்சிங் சவுஹான், மத்தியப் பிரதேச பாஜக தலைவர் மற்றும் காரியகர்த்தாக்கள் அனைவருக்கும் நன்றி'' என்று எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.
மணிப்பூர் ஆளுநராக உள்ள இல.கணேசன், முன்னதாக ம.பி.யில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT