Last Updated : 18 Sep, 2021 10:23 AM

1  

Published : 18 Sep 2021 10:23 AM
Last Updated : 18 Sep 2021 10:23 AM

அரியலூர் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் விதைப்பந்துகளை வீசிய இளைஞர்கள்

விதைப் பந்துகளைத் தூவிய இளைஞர்கள்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் நெரிஞ்சிக்கோரை முதல் நாச்சியார் பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலையோரங்களில் பல்வேறு வகையான விதைப் பந்துகளை இளைஞர்கள் வீசினர்.

நெரிஞ்சிக்கோரை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 20-க்கும் மேற்பட்டோர், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டத்தின் பல கிராமங்களிலும் உள்ள ஏரி, குளங்களின் கரைப் பகுதிகள், அரசு புறம்போக்கு இடங்கள், கோயில் வளாகங்கள் எனப் பல்வேறு இடங்களிலும் லட்சக்கணக்கான பனை விதைகள், மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர்.

இவர்கள் சென்னையில் உள்ள தன்னார்வ மையம் ஒன்றின் உதவியுடன் கரோனா காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு உணவுகளையும், குடிசையில் வாழும் மக்களுக்கு தார்ப்பாய், போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று முடியும் தறுவாயில் உள்ள நிலையில், சாலை விரிவாக்கத்தின்போது சாலையோரங்களில் இருந்த ஆயிரக்கணக்கான புளியமரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதனால், இந்தச் சாலையோரங்கள் முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனைக் கண்ட அந்த இளைஞர்கள் சாலையோரங்களில் மரங்களை மீண்டும் கொண்டுவரும் முயற்சியாக விதைப் பந்துகளைத் தயார் செய்து கடந்த 2 தினங்களாக வீசியுள்ளனர்.

இதற்காக, புளியம், வேம்பு, புங்கன், இழுப்பை உள்ளிட்ட விதைகள் கொண்ட 1,600 விதைப் பந்துகளைத் தயார் செய்து, திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெரிஞ்சிக்கோரை, ரெட்டிப்பாளையம், விளாங்குடி, நாச்சியார்பேட்டை ஆகிய ஊர்களுக்கு இடையேயான சுமார் 10 கி.மீ. தூரத்தின் இருபுறங்களிலும் விதைப் பந்துகளை வீசினர். இனி மழைக்காலம் தொடங்கும் நிலையில், அனைத்து விதைகளும் முளைத்து சாலையோரங்களைப் பசுமையாக்கும் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x