Last Updated : 18 Sep, 2021 03:11 AM

 

Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

நவராத்திரி விழாவுக்காக 4-வது தலைமுறையாக களிமண் பொம்மைகள் தயாரிக்கும் கைவினைக் கலைஞர்: பஞ்ச பூதங்களை உள்ளடக்கி வடிவமைப்பதால் நல்ல வரவேற்பு

மயிலாடுதுறையில் களிமண்ணால் ஆன கொலு பொம்மைகளை வடிவமைக்கும் ஆனந்தகுமார். (அடுத்த படம்) கொலு பொம்மைகளை பார்வையிடும் வாடிக்கையாளர்கள்.

கும்பகோணம்

மயிலாடுதுறையில் நவராத்திரியை முன்னிட்டு வைக்கப்படும் கொலு

வுக்காக கைவினைக் கலைஞர் ஒருவர், களிமண்ணால் வடிவமைக்கும் சுடுபொம்மைகள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

நவராத்திரி விழாவையொட்டி வீடுகளில் கொலு வைப்பதன் மூலம் தெய்வங்களை வீட்டுக்கே வரவழைப்பதான ஐதீகம் இன்றளவும் உள்ளது. எனவே நாடு முழுவதும் கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

நவராத்திரிக்குரிய கொலு பொம்மைகளை தமிழகம் முழுவதும் பல்வேறு கைவினைக் கலைஞர்கள் வடிவமைத்து வந்தாலும், மயிலாடுதுறையில் கடந்த 4 தலைமுறைகளாக ஒரே குடும்பம், பழமை மாறாமல் வழிவழியாக களிமண்ணால் மட்டுமே ஆன சுடுபொம்மைகளை தயாரித்து வருகிறது. இவை, தனித்துவத்தோடு விளங்குவதால் நாடு முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

மயிலாடுதுறையில் 70 ஆண்டுகளுக்கு முன்பு 10 குடும்பத்தினர் கொலு பொம்மைகளை தயாரித்து வந்தனர். ஆனால் நாளடைவில் கொலு பொம்மைகளுக்கு போதிய வரவேற்பு குறைந்து வருவாயும் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் பொம்மை தயாரிக்கும் தொழிலை மற்ற கலைஞர்கள் கைவிட்டு, வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், கண்ணு பத்தர் என்பவரது குடும்பம் மட்டும் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அவருக்கு அடுத்து அவரது மகன் முருகேசன், தியாகராஜன் என தொடர்ந்து, தற்போது 4-வது தலைமுறையாக ஆனந்தகுமார்(43) இந்த பொம்மைகளை தயாரித்து வருகிறார்.

இவர் தனது வீட்டிலேயே இதற்காக காட்சிக் கூடத்தையும் அமைத்துள்ளார். இங்கு ரூ.50 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலான பொம்மைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

களிமண்ணே மூலதனம்

இதுகுறித்து ஆனந்தகுமார் கூறியதாவது: எங்களது குடும்பத்தினர் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். நானும் இத்தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு சென்றேன். ஆனாலும், இத்தொழிலில் கிடைக்கும் திருப்தி வேறு தொழிலில் இல்லாததால், மீண்டும் பொம்மை தயாரிக்கும் தொழிலுக்கே திரும்பிவிட்டேன். பொம்மை தயாரிப்பில் அர்ப்பணிப்பு உணர்வும், கலா ரசனையும் இருந்தால்தான் நீடித்து நிலைக்க முடியும்.

கொலு பொம்மைகளை உருவாக்க எங்களுக்கு காவிரி கரையில் கிடைக்கும் ஒருவிதமான களிமண்தான் மூலதனம். அந்த மண்ணை பதப்படுத்தி மாவுபோல் கொண்டுவந்து, பொம்மைகளுக்கான மோல்டுகளில் வைத்து அச்சு எடுக்கப்படும். பின்னர் வைக்கோல், சாணவரட்டி, தேங்காய் மட்டைகளை கொண்டு 2 மணி நேரம் சூளையில் வைத்து சுடும்போது பொம்மைகள் நன்றாக பக்குவப்பட்டுவிடும். பிறகு, அவற்றுக்கு ஏற்ற வர்ணத்தை தீட்டும்போது கண்ணைக் கவரும் வகையில் இருக்கும்.

வெளிநாடுகளிலும் வரவேற்பு

இவற்றை உள்ளூரில் மட்டுமின்றி வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

ஆண்டுதோறும் பொம்மைகளை உற்பத்தி செய்தாலும், ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம்வரைதான் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை அதிகமிருக்கும். பஞ்சபூதங்களான நிலம்,நீர், காற்று, ஆகாயம், அக்னி ஆகியவற்றை உள்ளடக்கி பொம்மைகளை செய்வதால் இவை காலத்துக்கும் அப்படியே இருக்கும்.

இளைஞர்களுக்கு பயிற்சி

தற்போது அழிந்துவரும் இந்த பொம்மை வடிவமைப்புத் தொழில் எதிர்காலத்தில் நிலைத்திருக்க வேண்டுமானால், இளம் தலைமுறையினர் ஆர்வத்தோடு இதை கற்க முன் வர வேண்டும். அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் தயாராக இருக்கிறேன். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x