Published : 19 Feb 2016 06:54 PM
Last Updated : 19 Feb 2016 06:54 PM
தமிழக மலைக் கிராம மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு திட்டங்கள் செயல்படுத்தாததால் செம்மரம் வெட்டும் தொழிலுக்குச் செல்வதாக மலைக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாச்சல வனப் பகுதியில் கடந்த 6.4.2015-ல் செம்மரம் வெட்டச் சென்றதாக 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இருப்பினும், திருப்பதி வனப் பகுதியில் செம்மரக் கடத்தல் சம்பவம் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் உள்ள சின்ன வீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணி, வள்ளியூரைச் சேர்ந்த பெரிய பையன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகும், இவர்கள் உயிரை பணயம் வைத்து மீண்டும் செம்மரம் வெட்டச் செல்லும் காரணத்தைத் தெரிந்துகொள்ள அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்தோம்.
வள்ளியூரில் உள்ள பெரிய பையனின் குடிசை வீட்டுக்குச் சென்றபோது அவரது தந்தை ஆண்டி, மகள் வெண்ணிலா (21) மகன் சின்னதுரை (15), மகள் சங்கீதா (13) ஆகியோர் தயக்கத்துடன் பேசத் தொடங் கினர்.
சங்கீதா கூறும்போது, “எங்களுக்கு அம்மா கிடையாது. சொந்தமாக 2 ஏக்கர் நிலம் மட்டும் உள்ளது. கூலி வேலைக்குச் செல்வதாக சென்றவர் திருப்பதியில் கைதானதாக செய்தித்தாளில் பார்த்து தெரிந்துகொண்டோம். அவரை மீட்க வழி சொல்லுங்கள்.விவசாயம் இல்லாவிட்டால் கூலி வேலைக்குச் சென்றால்தான் குடும்பம் நடத்த முடியும். எங்களுக்கு வேறு வேலை தெரியாது. வருமானமே இல்லாத இந்த ஊரில் குடும்பத்தை எப்படி நடத்துவது? வருமானம் இருந்தால் ஏன் மரம் வெட்டப் போகிறார்கள்’’ என்றார்.
நம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத இளைஞர் கூறும்போது, “சாலைகள், பள்ளி, மருத்துவ வசதிக்காக இன்றைக்கும் போராடுகிறோம். பணத்தாசை காட்டி புரோக்கர்கள், செம்மரம் வெட்ட அழைத்துச் செல்கிறார்கள். வேலை முடிந்ததும் கை நிறைய பணம் கொடுக்கிறார்கள். ஒரு கிலோ மரத்துக்கு 300 முதல் 500 ரூபாய் என கணக்கிட்டுக் கொடுப்பார்கள். ஒரு முறை செம்மரம் வெட்டச் சென்றால் திரும்பி வர 7 முதல் 10 நாட்களாகிவிடும். குறைந்தது 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தை வைத்து வேலை இல்லாத நாட்களில் குடும்பத்தை நடத்த முடியும். திருப்பதி என்கவுன்ட்டர் சம்பவத்துக்குப் பிறகும் எங்களை அரசாங்கம் பெரிதாக கவனிக்கவில்லை.
இதே மலையில் நாள்தோறும் 150 முதல் 200 ரூபாய் வரை கூலி கிடைக்கும் வகையில் வேலை கொடுத்தால், நாங்கள் ஏன் துப்பாக்கி குண்டுக்கு சாகப் போகிறோம்’’ எனக் கேள்வி எழுப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT