Published : 18 Sep 2021 03:13 AM
Last Updated : 18 Sep 2021 03:13 AM
டெல்டா மாவட்டங்களில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடையான நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு நிகழாண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், வழக்கமான பரப்பளவைத் தாண்டி குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில், 1.64 லட்சம் ஏக்கரும், திருவாரூர் மாவட்டத்தில் 1.37 லட்சம் ஏக்கரும், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 1.30 லட்சம் ஏக்கரும் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறுவை பருவம் ஜூன் மாதத்தில் தொடங்கினாலும், வடிமுனை குழாய் வசதியுள்ள இடங்களில் விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியை ஏப்ரல், மே மாதங்களிலேயே தொடங்கி விடுகின்றனர். குறைந்த வயதுடைய இந்த நெல் ரகங்கள் ஆகஸ்ட் முதலே அறுவடை செய்யப்படுகின்றன.
இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கரும், திருவாரூர் மாவட்டத்தில் 36 ஆயிரம் ஏக்கரும், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 70 ஆயிரம் ஏக்கரும் என இதுவரை 1.66 லட்சம் ஏக்கரில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. இம்மாத இறுதியில் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெறும்.
ஆனால், நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளாக அடுக்கி வைத்துள்ளனர். ஆனால், கொள்முதல் நிலையங்களில் குறைந்த அளவிலேயே கொள்முதல் செய்யப்படுவதால் நெல் மூட்டைகள் மழை, வெயில் ஆகியவற்றால் வீணாகின்றன.
முன்பட்ட குறுவை அறுவடை செய்யப்பட்ட இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்சம் 3 ஆயிரம் முதல் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.
இதனால், பல விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை கொண்டு செல்லாமல் வீடுகள், மாட்டுக் கொட்டகை, களங்கள் உள்ளிட்ட இடங்களில் அடுக்கி வைத்து, தார்ப்பாய்களை போட்டு உரிய பாதுகாப்பின்றி மூடி வைத்துள்ளனர்.
நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய இயலாததால் விவசாயிகள் பலர் இடைத்தரகர்களிடம் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.150 விலை குறைவாக நெல்லை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நெல்லை உடனடியாக விற்பனை செய்ய முடியாததால், அடுத்த பருவ சாகுபடிக்கு பணம் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
எனவே, தமிழக அரசு நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து விவசாயிகளிடம் நெல்லை துரிதமாக கொள்முதல் செய்ய வேண்டும். இதில் முறைகேடுகளை தவிர்க்க வேளாண்துறை அதிகாரிகளிடம் பரிந்துரை கடிதம் பெற்று விவசாயிகளின் நெல்லை நேரடியாக அவர்களது வயல்களுக்கே சென்று கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இது மிகவும் அவசியமானது என்பதை அரசு உணர்ந்து விரைந்து செயல்பட்டால் மட்டுமே விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT