Published : 17 Sep 2021 04:47 PM
Last Updated : 17 Sep 2021 04:47 PM
புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிட முடிவெடுத்து அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதல்வர் ரங்கசாமியிடம் அளித்தனர்.
புதுவை மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள கோகுலகிருஷ்ணன் பதவிக்காலம் வரும் அக்டோபர் 6-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. புதிய எம்.பி.யைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 4-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் 15-ம் தேதி தொடங்கியது. 22-ம் தேதி மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்.
இன்னும் 4 நாட்களே மனுத்தாக்கல் செய்ய காலம் உள்ளது. ஆனால், இதுவரை என்ஆர்.காங்கிரஸ், பாஜகவில் தேர்தலில் போட்டியிடுவது யார்? என முடிவு செய்யப்படாமல் உள்ளது.
இரு கட்சிகளும் மாநிலங்களவை எம்.பி.யைப் பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளன. பாஜகவைப் பொறுத்தவரை மாநிலங்களவையில் கட்சியின் எண்ணிக்கையை உயர்த்த விரும்புகிறது. இந்த நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் ஹோட்டல் அக்கார்டில் இன்று மதியம் நடந்தது.
மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணக்குமார், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், விவியன் ரிச்சர்ட், ஆதரவு தரும் சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், நியமன எம்எல்ஏக்கள் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. கூட்டத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவியைக் கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கித் தரவேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் கூறுகையில், "அகில இந்தியத் தலைமை அறிவுறுத்தல்படி வரும் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்துகிறது. இதில் கட்சித் தலைமை உறுதியாக உள்ளது. எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்து முதல்வரைச் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தந்தனர். அதை வாங்கிக்கொண்ட முதல்வர் ரங்கசாமி, படித்துப் பார்த்துவிட்டு புன்னகைத்தார். பதில் ஏதும் கூறவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT