பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்

கோடநாடு வழக்கு: காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்த ஐஜியிடம் மனு  

Published on

கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்த ஐஜியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு கொள்ளை வழக்கு விசாரணையை போலீஸார் விரைவுபடுத்தி வருகின்றனர். இந்த வழக்கின் 103 சாட்சிகளில் 41 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது பல சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணை உதகையில் உள்ள பழைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் இருந்த நண்பர்கள் என, அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரிடம் மறு விசாரணை நடந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 10-வது நபரான ஜித்தின் ஜாயின் உறவினர் ஷாஜியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், வழக்கின் 40-வது சாட்சியான உயிரிழந்த கனகராஜின் நண்பர் குழந்தைவேலு, சிவன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த திருமூர்த்தி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜம்சீர் அலி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. போலீஸார் ஜித்தின் ஜாயை விசாரணைக்கு அழைத்தனர்.

இந்நிலையில், தங்களிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜித்தின் ஜாய், சந்தோஷ் சாமி, சதீசன், தீபு ஆகியோர், வழக்கறிஞர்கள் கே.விஜயன், முனிரத்தனம், செந்தில் ஆகியோர் மூலம் மேற்கு மண்டல ஐஜியிடம் இன்று (செப். 17) ஆன்லைனில் மனு அளித்துள்ளனர்.

வழக்கறிஞர்கள் கே.விஜயன், முனிரத்னம், செந்தில் கூறுகையில், "கேரளாவில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது. எங்கள் கட்சிக்காரர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இதனால், போலீஸார் விசாரணையை காணொலிக் காட்சி மூலம் நடத்த வேண்டும் என, ஐஜியிடம் மனு அளித்துள்ளோம். நேரில் விசாரணை நடத்த முற்பட்டால், வழக்கறிஞர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்" என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in