Published : 17 Sep 2021 01:08 PM
Last Updated : 17 Sep 2021 01:08 PM
செப்டம்பர் 20ஆம் தேதி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற வகையில், தங்கள் வீடுகளின் முன்பாக கருப்புக் கொடி ஏற்ற வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (செப்.17) வெளியிட்ட அறிக்கை:
"கடந்த ஆகஸ்ட் 20 அன்று சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற 19 எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற செப்டம்பர் 20 முதல் 30ஆம் தேதி வரை மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் எதிர்ப்பைத் தெரிவிக்கவுள்ளன.
அதன்படி, தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் எடுத்த முடிவின்படி, வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற வகையில், தங்கள் வீடுகளின் முன்பாக கருப்புக் கொடி ஏற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்திலுள்ள காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளின் முன்பாக கருப்புக் கொடி ஏற்றி பாஜக அரசுக்குக் கண்டனத்தை வெளிப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கருப்புக் கொடி ஏற்றி பாஜக அரசை ஏன் எதிர்க்கிறோம் என்பதை மக்களிடையே பரப்புரை நிகழ்த்துகிற வகையில், கீழ்க்கண்ட கருத்துகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
* பெகாசஸ் மென்பொருள் மூலம் வேவு பார்த்த விவகாரத்தையும், 3 விவசாய சட்டங்களை ரத்து செய்வது உள்ளிட்ட நாட்டைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், மழைக்காலக் கூட்டத் தொடரை பாஜக அரசு வீணடித்தது.
* கரோனாவின் இரண்டாவது அலையைத் தவறாகக் கையாண்டதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, நேசத்துக்குரிய குடும்ப உறுப்பினர்களை இழந்து பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த எண்ணிக்கையை சர்வதேச மற்றும் தேசிய ஊடகங்கள் வெளியிட்டதைவிட, 5 மடங்கு குறைவான எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.
* தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. நாட்டின் சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.
* வருமான வரி வளையத்துக்குள் இல்லாத மக்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 பணப் பரிமாற்றத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
* பெட்ரோலியம் மற்றும் டீசலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்ட மத்திய கலால் வரியைத் திரும்பப் பெற வேண்டும். சமையல் எரிவாயு மற்றும் சமையல் எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
* இந்தியப் பொருளாதாரம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஏற்கெனவே லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். கோடிக்கணக்கான மக்களை வேலைவாய்ப்பு இல்லாத நிலைக்கு மத்திய அரசு தள்ளிக் கொண்டிருக்கிறது. பணவீக்கம் மற்றும் விலை உயர்வால் வறுமையும் பசியும் அதிகரித்துள்ளன. மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளது.
* விவசாயிகள் விரோதச் சட்டங்களை எதிர்த்துப் போராடும் நமது விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் 9 மாதங்களாகத் தொடர்கிறது. ஆனால், 3 சட்டங்களையும் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதத்தைத் தரவும் மத்திய அரசு மறுக்கிறது.
* ராணுவத்துக்கு வேவு பார்க்கும் பெகாசஸ் மென்பொருளை இந்திய அரசு கொள்முதல் செய்தது பேராபத்தாகும். இதுபோன்ற கண்காணிப்புகள் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். இந்திய ஜனநாயகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் மீது நடத்திய தாக்குதலாகும். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளைக் கண்காணிக்கவே பெகாசஸ் வாங்கப்பட்டதாக உலக அளவிலான ஊடகங்கள் ஆதாரத்துடன் கூறுகின்றன.
* பெருமளவு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கி நம் தேசிய சொத்துகளைக் கொள்ளையடிக்க முயல்கின்றனர். குறிப்பாக, வங்கிகள், நிதித்துறை சேவைகள், கனிம வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கவுள்ளனர்.
* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் என்று இல்லாமல், நிதியுதவித் தொகுப்புகளை அமல்படுத்த வேண்டும். நமது பொருளாதாரத்தைக் கட்டமைக்க பொது மூலதனத்தை அதிகரிக்க வேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் உள்ளூர் தேவையை அதிகரித்து சமூகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை இரட்டிப்பாக்க வேண்டும். அதேபோன்று நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
* மக்களைக் கண்காணிக்கும் பெகாசஸ் வேவு பார்க்கும் மென்பொருள் பயன்பாடு குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். முந்தைய கொள்முதல் உத்தரவை ரத்து செய்துவிட்டு அதிக விலையில் புதிய கொள்முதல் உத்தரவு பிறப்பித்து ரபேல் விமானங்கள் வாங்கியது தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும்.
* உபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். ஜனநாயக உரிமைகள் மற்றும் மக்களின் உரிமைகளை மீறி, கொடூரமான தேசத்துரோக குற்றச்சாட்டு மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில், கருத்துகளை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை விடுதலை செய்ய வேண்டும்.
* ஜம்மு மற்றும் காஷ்மீரில் கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். ஜம்மு காஷ்மீரில் நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.
ஜனநாயகத்துக்கு விரோதமாக சர்வாதிகார முறையில் மோடி தலைமையில் நடைபெற்று வருகிற ஆட்சியை அகற்றுவதற்கான போராட்டத்தின் விளைவாகவே கருப்புக் கொடி ஏற்றி நமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம். இதன் மூலம் பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை உணர்ந்து உரிய பாடத்தை, உரிய நேரத்தில் அனைத்து மக்களும் புகட்டுவார்கள் என நம்புகிறோம்.
நாளைய நாளை நல்ல நாளாக மாற்ற, இன்றைக்கு இந்தியாவைக் காக்கும் புனிதப் போரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்துகிற வகையில், மத்திய பாஜக அரசுக்கு எதிராகத் தமிழகமே அணி திரண்டிருக்கிறது என்கிற உணர்வை வெளிப்படுத்துவோம், வெற்றி பெறுவோம்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT