Published : 17 Sep 2021 11:45 AM
Last Updated : 17 Sep 2021 11:45 AM

பெரியார் பிறந்த தினம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதியேற்பு

பெரியார் உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை.

சென்னை

பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சமூக நீதி நாள் உறுதியேற்பை எடுத்துக் கொண்டனர்.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், "பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும்" என, சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்திலுள்ள தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாளான செப்.17-ம் தேதி அன்று உறுதிமொழி எடுக்கப்படும் எனவும், அவர் அறிவித்திருந்தார்.

அதன்படி, பெரியாரின் பிறந்த நாளான இன்று, சென்னை, அண்ணா சாலையில் உள்ள அவருடைய சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, மூத்த அமைச்சர்கள் உடனிருந்தனர்.

பின்னர், தலைமைச் செயலகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் 'சமூக நீதி நாள்' கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது, உறுதிமொழியை முதல்வர் வாசிக்க, அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் -

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்

எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!

சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும்!

சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!' என, அனைவரும் உறுதியேற்றுக் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x