Published : 17 Sep 2021 03:11 AM
Last Updated : 17 Sep 2021 03:11 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பிடாகம் எனும் எலவனாசூர்கோட்டை கிராம நிர்வாக அலுவலராக மகாலிங்கம் என்பவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவருக்கு உதவி புரிய கிராம உதவியாளர்கள் செல்வம் மற்றும் சீனுவாசன் ஆகிய இருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக அதே கிராமத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலரான மகாலிங்கம் தனக்கு உதவியாக, தன்னிச்சையாக அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரை அலுவலகத்தில் பணி செய்ய அனுமதித்துள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த நபர் கிராம நிர்வாக அலுவலருக்கான இருக்கையில் அமர்ந்துகொண்டு அலுவல் பணிகளை மேற்கொள்வதாகவும், சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட தேவைகளுக்காக வரும் பொதுமக்களிடம் இவர் மனுவைப் பெற்றுக் கொள்வதாகவும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தாலும், இவரிடம் தகவல் கூறினால் தான் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் நிலை இருக்கிறது என்று அக்கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மேலும், அலுவலக கோப்புகளை இவர் பராமரிப்பதோடு, விண்ணப்பதாரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, கிராம நிர்வாக அலுவலரும், ரவி என்பவரும் அதன்மூலம் ஆதாயம் அடைவதாக கிராம உதவியாளர்கள் புலம்புகின்றனர்.
பலதரப்பட்ட மக்களின் சொத்து விபரங்கள் அடங்கிய ஆவணங்களை தனிநபர் கையாள அனுமதிப்பதால் பல்வேறு தவறுகள் நடை பெற வாய்ப்பிருப்பதாக கூறும் முன்னாள் கிராம முக்கியஸ்தர்கள், கிராம நிர்வாக அலுவலருக்கு உதவியாளர்கள் என இருவர் பணியமர்த்தப்பட்ட போதிலும் இப்படிச் செய்வது முற்றிலும் தவறானது என்று ஆதங்கப்படுகின்றனர்.
இதுகுறித்து விளக்கம் பெற கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கத்தையும், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கோபால கிருஷ்ணனையும் பலமுறை தொடர்பு கொண்ட போதும், இருவரும் விளக்கம் அளிக்க முன்வரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT