Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

10-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்புக்கு காரணமான ‘நீட்’ தேர்வுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை

காட்பாடி அருகே ‘நீட்' தேர்வு முடிவு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி சவுந்தர்யாவின் குடும்பத்தினருக்கு நேற்று நேரில் ஆறுதல் தெரிவித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

வேலூர்

தமிழக அரசு ‘நீட்' தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி சவுந்தர்யா (17), ‘நீட்' தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்று விடுவோமோ என்ற அச்சத்தில் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பல்வேறு முக்கிய அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய இணை அமைச்சரும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், அணைக்கட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் ‘நீட்' தேர்வு பத்துக்கும் மேற்பட்டோரை காவு எடுத்திருக்கிறது. அதன் பசி என்று தீரும் என தெரியவில்லை. பெற்றோர்களின் கண்ணீர் வீண் போகாது. இன்று இல்லாவிட்டாலும் நாளை ‘நீட்' என்ற அரக்கனை ஒழித்து தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும்.

பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்

பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள், பயத்தாலோ அல்லது முடிவு வந்த பிறகு ஏற்படும் தோல்வியாலோ மனம் உடைந்து விடக்கூடாது. தேர்வில் தோல்வி அடைவதால் உலகம் மூழ்கி விடாது. தேர்வுக்கு பின்னும் வாழ்க்கை உள்ளது. வீரமாக இதை எதிர்த்து நிற்போம். ஆனால், இதற்கு பிறகும் மத்திய அரசு இணங்குமா என தெரியவில்லை. ஓராண்டு களுக்கும் மேலாக டெல்லியிலேயே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 பேருக்கு மேல் உயிரிழந் துள்ளனர்.

அதற்கெல்லாம் இணங்காத மத்திய அரசு இந்த 10 மாணவர்களுக்காக இணங்குமா என்ற சந்தேகம் உள்ளது. எது எப்படி இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x