Published : 16 Sep 2021 10:24 PM
Last Updated : 16 Sep 2021 10:24 PM

மத்திய அரசைக் கண்டித்து செப்.20ல் திமுக, கூட்டணிக் கட்சிகள் கண்டனப் போராட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

"மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் செப்டம்பர் 20 ஆம் தேதியன்று திமுக, கூட்டணிக் கட்சிகளின் சார்பில், கண்டனப் போராட்டம் நடைபெறும்" என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடந்த இந்திய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொலிக் கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, ஜனநாயா விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி மத்திய பாஜக அரசின் செயல்களைக் கண்டித்து திமுக தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் 20ஆம் தேதி காலை 10 மணி அளவில் தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும்.

திமுக தலைவர் ஸ்டலின் உள்ளிட்ட திமுக தலைமையிலான அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விடுத்த அறிக்கையின்படி, திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர், ஊராட்சி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து 20 ஆம் தேதி தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

மாவட்ட கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் தத்தமது மாவட்டத்தில் உள்ள கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நடைபெறும் இக்கண்டனப் போராட்டத்தைச் சிறப்பாக நடத்திட ஏற்பாடு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x