Published : 16 Sep 2021 05:58 PM
Last Updated : 16 Sep 2021 05:58 PM

பொதுச் சொத்துகளை விற்பது நாட்டின் சுயசார்பைத் தகர்க்கும் செயல்: முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

பொதுச் சொத்துகளை விற்பது நாட்டின் சுயசார்பைத் தகர்க்கும் செயல் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, முத்தரசன் இன்று (செப். 16) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய அரசின் அமைச்சரவை பிரதமரின் தலைமையில் கூடி தொலைத்தொடர்புத் துறையில் நூறு சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் நிதியமைச்சர் பொதுச் சொத்துகளை விற்று 6.5 லட்சம் கோடி ரூபாய் பணம் திரட்டுவது என்ற விபரீதத் திட்டத்தை அறிவித்துள்ளார்.

நாடு விடுதலை பெற்ற பின்னர் சுயசார்புப் பொருளாதாரக் கட்டமைப்பைக் கட்டவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் உதவ மறுத்துவிட்டன. ஆனால், அப்போதிருந்த சோவியத் யூனியனும், சோசலிச நாடுகளும் சுயசார்புக் கொள்கைக்கு உதவும் வகையில் பெரும் உதவி செய்தன.

இதனுடன் மக்கள் சேமிப்பு மற்றும் வரிப் பணத்தின் உதவியோடு பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இதில் பிஹெச்இஎல், பிஹெச்எல், பிலாய், சேலம் இரும்பாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என, 200-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் உருவாகி, அதில் பணிபுரிந்த பல்லாயிரம் தொழிலாளர்களின் கடின உழைப்பால் பொருளாதார அடித்தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் தேசவுடைமை ஆக்கப்பட்டதன் மூலம் நாட்டின் இறையாண்மையும், சுயசார்பும் மேலும் வலிமைப்படுத்தப்பட்டது. 2008ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டில் வெளிப்பட்ட பொருளாதார மந்தமும், லேமன் பிரதர்ஸ் வங்கிகள் திவாலானதும் பல நாடுகளின் பொருளாதாரத்தை நிலைகுலைந்து சிதைத்துவிட்டன.

இந்த நெருக்கடியான காலத்தில் நாட்டின் சுயசார்பை நிலைநிறுத்தியது பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பாக நிதி நிறுவனங்கள் என்பதை நாடறியும். இந்த நிலையில் பாதுகாப்புத் துறைக்கான ஆயுதத் தளவாட உற்பத்தி தொடங்கி, தொலைத்தொடர்புத் துறை வரை அந்நிய நேரடி முதலீட்டின் கட்டுப்பாட்டுக்குப் போகுமானால், நாடு நவீன காலனி ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு அவதியுறும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சுட்டிக் காட்டுகிறது.

பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் என்பது நாட்டின் சொத்துகளைப் பாதுகாப்பதற்கு மாறாக அன்றாடம் விலை பேசி விற்கும் வியாபாரக் கூட்டமாக மாறியிருப்பது வரலாற்று அவலம். இந்த அவல நிலைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவதில் அணி திரள வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு அறைகூவி அழைக்கிறது".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x