Published : 16 Sep 2021 03:03 PM
Last Updated : 16 Sep 2021 03:03 PM

''உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறவே கே.சி.வீரமணி வீட்டில் சோதனை; மனப்பால் குடிக்காதீர்கள்'': ஓபிஎஸ்- ஈபிஎஸ் கண்டனம்

சென்னை

உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெறவே கே.சி.வீரமணி வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், மக்களை வாக்களிக்க வைக்க மனப்பால் குடிக்க வேண்டாம் என்றும் அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

''கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம். வளர்ச்சிக்கு அறிகுறி அது. நாம் மக்கள், வனவிலங்குகள் அல்ல. இது நாடு, காடு அல்ல. காட்டு முறையைக் கையாண்டால் அதற்குப் பெயர் ஜனநாயகமாகாது; பாசிச முறை அது’’ என்றார் பேரறிஞர் அண்ணா. இந்தக் கூற்றுக்கு முற்றிலும் முரணான வகையில், ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.

அண்மையில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சாத்தியப்படாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதை நிறைவேற்ற முடியாமல் மக்களின் வெறுப்பினைச் சம்பாதித்திருக்கின்ற நிலையில் அதனை மூடி மறைத்து, உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளரும், அதிமுகவின் தீவிர செயல் வீரருமான கே.சி.வீரமணியின் வீட்டிலும், அவரது உறவினர்கள், நண்பர்கள் என்று, நடந்து முடிந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் திமுக- கூட்டணிக்கு எதிராகத் தேர்தல் வேலை பார்த்தவர்கள் என்று சுமார் 28 இடங்களில், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, 'ஸ்டாலின் போலீஸார்' சோதனை என்ற பெயரில் இன்று ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். இது, உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை.

தமிழ்நாட்டு மக்களுக்குத் தேர்தல் சமயத்தில் நிறைவேற்ற முடியாத 505-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கிய பின்னும், வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் ஆட்சியைப் பிடித்தது திமுக. எப்படியாவது ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதற்காக நீட் தேர்வு ரத்து பற்றி மாணாக்கர்களிடம் பொய்ச் செய்திகளைப் பரப்பிய மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மீது பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில், தமிழக மக்களின் வெறுப்பிற்கு திமுக அரசு ஆளாகியுள்ளது. மக்களின் எதிர்ப்பு உணர்வை, கசப்பான மன ஓட்டத்தை மாற்ற, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் தேர்தல் சமயத்தில் திமுகவின் அராஜகத்தை எதிர்த்து நின்று ஜனநாயகக் கடமையாற்றிய வீரர்கள் என்று பலர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்தும், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தல் என்ற பெயரில் தனது காவல்துறையினரை ஏவி, பலவித இடையூறுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

பொதுவாக, உள்ளாட்சித் தேர்தல் தமிழ்நாடு முழுவதும் 2 கட்டமாகத்தான் நடைபெறும். ஆனால், வெறும் 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் இருந்தே திமுகவின் தேர்தல் தோல்வி பயம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. இந்தத் தேர்தலை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். அதைக் காரணமாக வைத்து உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்கலாம் என்று ஆளும் திமுகவினர் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக மற்றும் ஸ்டாலினின் அதிகார வர்க்கம் மற்றும் குடும்ப ஆதிக்கம் ஆகியோரின் கூட்டணியை, ஜனநாயக முறைப்படி எதிர்கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முழு முயற்சியுடன் தயாராக உள்ளோம்.

இன்று, ஏற்கெனவே அறிவித்தபடி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற இருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த 120 நாட்களில், முன்னாள் அமைச்சர்களான, கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கோவை எஸ்.பி. வேலுமணி ஆகியோரைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை கே.சி.வீரமணி வீட்டிலும், அவரது நண்பர்கள் என்று திமுக அரசின் போலீஸாரே முடிவு செய்த சுமார் 28 இடங்களிலும் இன்று சோதனை என்ற பெயரில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்குத் தோல்வி ஏற்படும் என்று சந்தேகப்படும் மாவட்டங்களில், அதிமுக செயல் வீரர்களின் செயல்பாடுகளைச் சீர்குலைக்கும் விதத்தில், முக்கிய நிர்வாகிகளைச் செயல்பட விடாமல் தடுக்கும் நோக்கத்தின் முதல் படியாக இன்று, கே.சி. வீரமணி வீட்டில் நடத்தப்படும் சோதனையை ஒரு பழிவாங்கும் படலமாகவே அரசியல் பார்வையாளர்களும், பொதுமக்களும் பார்க்கிறார்கள்.

இத்தகைய சலசலப்புகளுக்கும், பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கும் அதிமுகவும், அதன் நிர்வாகிகளும் என்றும் அடிபணிந்ததில்லை. சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் எப்போதுமே சட்டத்தின் ஆட்சியைத்தான் தமிழகத்தில் நடத்தி வந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வழிவந்த அரசும் சட்டப்படிதான் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தது. எனவே, இத்தகைய ஒடுக்குமுறைகளைச் சட்டத்தின் துணைகொண்டு எதிர்கொள்வோம்; வெற்றி பெறுவோம்.

அதிமுக நிர்வாகிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு நிதிப் பற்றாக்குறை காரணம் என்றும், நீட் தேர்வு ஒழிப்பு என்பது மத்திய அரசின் மூலம் இந்தியக் குடியரசுத் தலைவரால்தான் முடியும் போன்ற சாக்குபோக்குகளைக் கூறாமல், தேர்தல் சமயத்தில் அளித்த 505-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு, தொழில்துறை, உணவு உற்பத்தி உள்ளிட்ட அனைத்து முக்கியமான துறைகளில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்ந்ததையும், கரோனா நோய்த் தொற்று தடுப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்ததையும் மனதில் நிலைநிறுத்தி, அதுபோல் தமிழ்நாட்டைத் தொடர்ந்து முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அரசியல் கட்சிகளை மிரட்டி, அதன்மூலம் மக்களைப் பணிய வைத்து, தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்க வைத்துவிடலாம் என்று மனப்பால் குடிக்காமல், 'மக்களைப் பார்த்து ஆளுகிறவர்கள் அஞ்ச வேண்டும். ஆளுவோரைப் பார்த்து மக்கள் அஞ்சக்கூடாது. அதுதான் உண்மையான ஜனநாயகம்' என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப ஜனநாயக முறையில் தேர்தலைச் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்''.

இவ்வாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x