Published : 16 Sep 2021 01:24 PM
Last Updated : 16 Sep 2021 01:24 PM
புற்றுநோய் மற்றும் இருதய நோய் அறுவை சிகிச்சைகளுக்காக, பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்பட்டது என, டி.ஆர்.பாலு எம்.பி.க்கு, பிரதமர் அலுவலகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக, டி.ஆர்.பாலு எம்.பி. அலுவலகம் இன்று (செப். 16) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"வளசரவாக்கத்தைச் சேர்ந்த வேலப்பனின் மகன் ஜெயக்குமார் புற்றுநோயினாலும் மற்றும் மதுரவாயலைச் சேர்ந்த ராமானுஜம் என்பவரின் மகன் ஏழுமலை இருதய நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதால், மேற்கண்ட இருவருக்கும், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, உதவி அளிக்குமாறு, கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, பிரதமர் மோடிக்குக் கடிதங்கள் எழுதியிருந்தார்.
பிரதமர் அலுவலகத்திலிருந்து, 9 ஆகஸ்ட் மற்றும் 1 செப்டம்பர் 2021 தேதியிட்ட கடிதங்களில் குறிப்பிட்டுள்ள விவரம்:
'பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ஜெயக்குமாரின் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 3,000,00, அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் மற்றும் ஏழுமலையின் இருதயநோய் மருத்துவ சிகிச்சைக்காக, ரூபாய் 50,000 மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கும் வழங்கப்படும். சிகிச்சை முடிந்த பின்னர், உரிய ஆவணங்களின் நகலை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆவணங்கள் கிடைத்த பின்னர், மேற்கண்ட உதவித் தொகையானது உடனடியாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்படும்' என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு டி.ஆர்.பாலு எம்.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT